சமூகவலைத் தளத்தில் உலாவும் சதிக்கோட்பாடு!!! திணறும் டிவிட்டர், பேஸ்புக் நிறுவனங்கள்!!!
- IndiaGlitz, [Saturday,August 08 2020]
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு எதிராக பயங்கரச் சதித்திட்டங்கள் தீட்டப்படுகிறது என்ற கருத்தை வலுவாக நம்பி, அப்படியான கருத்தை சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து விவாதித்து, அதை மற்றவர்களுக்கு பரப்பும் ஒரு குழு இயங்கி வருவதாக தற்போது பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. இப்படி இயங்கும் 2 லட்சம் பேரை உறுப்பினர்களாகக் கொண்ட கியூஅனான் (Q/Qanon) என்ற குழுவை தற்போது டிவிட்டர் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் நீக்கியிருக்கிறது. ஆனால் அவர்களுடன் தொடர்புடைய மற்ற குழுக்கள் மற்றும் தேடு சொற்களுடன் இணைந்திருக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவை தற்போது இந்நிறுவனங்களுக்கு பெரிய தலைவலியாக மாறியிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
டீப் ஸ்டேட், வணிக மற்றும் ஊடக நிறுவனங்களுடன் தொடர்புடையவர்களால் இயக்கப்படும் ரகசியக் குழுவிற்குப் பெயர்தான் இந்த கியூஅனான். குறிப்பாக டீப் ஸ்டேட் எனப்படுவது அமெரிக்க அரசியலுக்கு வெளிப்படையாகத் தெரிந்த மற்றும் சிறு அதிகாரத்தில் உள்ளவர்களால் செயல்படும் ஒரு சமூக வலைப்பின்னல். இவர்கள் தங்களுடைய குழுவை வலுவாக இயக்குவதன் மூலம் அமெரிக்க அரசியலுக்கே தற்போது அச்சுறுத்தலை விளைவிக்கக் கூடும் எனவும் கருத்துக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் இவர்களால் அரசாங்கத்தையே கட்டுப்படுத்த முடியும் எனவும் கூறுகிறார்கள். இத்தகைய ஆபத்துடைய கியூஅனான் குழு தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் விவாதித்தும் கருத்துக்களைப் பரப்பியும் வருகிறது என டிவிட்டர் நிறுவனம் கடந்த மாதம் அக்குழு தொடர்புடைய அனைத்துச் செயல்பாடுகளையும் முடக்கியது.
தற்போது கியூஅனான் தேடு சொற்களுடன் தொடர்புடைய வீடியோக்களும் முடக்கப் பட்டு இருக்கின்றன. ஆனால் பேஸ்புக்கில் இன்னும் இந்தக் குழுவோடு தொடர்புடைய மற்றவர்கள் தொடர்ந்து ரகசியமாக உரையாடி வருவதாகவும் கருத்துகளை பகிர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து “எங்கள் சமுதாயக் கொள்கைகளை மீறும் உள்ளடக்கத்தை தொடர்ந்து பதிவிட்டதற்காக” இந்த குழு அகற்றப்படுகிறது என ஃபேஸ்புக்கின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்து இருக்கிறார். மேலும் கடந்த வருடம் அந்நாட்டின் FBI வெளியிட்ட உள்நாட்டு தீவிரவாதிகள் குறித்து எச்சரித்து இருந்த அறிக்கையில் இந்த கியூஅனானன் இடம் பெற்றிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.