100 ரூபாயை கூட விடவில்லை: 45 பழங்குடி இன மக்களின் வாழ்நாள் சேமிப்பை மோசடி செய்த மர்ம நபர்!
- IndiaGlitz, [Sunday,May 17 2020]
கொரோனா நிவாரண நிதி தருவதாக 45 பழங்குடியின மக்களை ஏமாற்றி அவர்களின் வங்கிக் கணக்கில் உள்ள வாழ்நாள் சேமிப்பு மொத்த பணத்தையும் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சின்னேரி என்ற கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி இனத்தைச் சேர்ந்த 45 பேர் இந்த மோசடியில் சிக்கி உள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சின்னேரி கிராமத்தில் உள்ள 45 பேர்களும் தங்கள் வாழ்நாள் சேமிப்பாக சுமார் ஒரு லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வைத்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா நிவாரண நிதியாக பிரதமர் மோடி 5,000 ரூபாய் வழங்க உள்ளதாக சின்னேரி கிராமத்தில் வசிக்கும் பெண்கள் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கும் ராணி என்பவருக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்துள்ளார். மேலும் எஸ்பிஐ வங்கியில் தான் பணி செய்வதாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.
இதனை உண்மை என நம்பிய ராணி, பழங்குடியினத்தைச் சேர்ந்த 45 பேர்களிடம் இது குறித்து கூறியுள்ளார். மேலும் பிரதமர் வழங்கும் நிவாரணத் தொகை கிடைக்க வேண்டுமென்றால் அவர்களுடைய டெபிட் கார்டு தகவல்களை கொடுக்க வேண்டும் என்றும், அந்த மர்ம நபர் கூறியுள்ளார். இதனையும் உண்மை என நம்பி 45 பேரும் தங்களது டெபிட் கார்டு, சிவிவி எண்ணையும் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் போன் செய்து அந்த மர்ம நபர் 45 பேர்களின் மொபைல் எண்ணுக்கு வந்த ஓடிபி எண்களை தரும்படி கூறியுள்ளார். ராணியும் 45 பேர்கள் செல்போனில் வந்த ஓடிபி எண்களையும் கொடுத்துள்ளார். இந்த எண்களை கொடுத்த ஒரு சில நிமிடங்களில் 45 பேர்கள் வங்கி கணக்கில் இருந்த அனைத்து பணமும் எடுக்கப்பட்டுள்ளதாக எஸ்எம்எஸ் வந்துள்ளது. ஆனால் ஆங்கிலத்தில் வந்த எஸ்எம்எஸ்களை படிக்க கூட தெரியாமல் அந்த பழங்குடியினர், தங்களுக்கு பிரதமரின் உதவித்தொகை வந்துவிட்டதாக மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அந்த பகுதியில் உள்ள கிராம நிர்வாக அதிகாரி ஒருவர் மெசேஜை படித்து அவர்கள் ஏமாந்ததை கூறியவுடன் தான் 45 பேரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பழங்குடியின மக்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்த விசாரணையில் ஒரு சிலர் தங்கள் வங்கிக்கணக்கில் வைத்திருந்த நூறு ரூபாயை கூட விடாமல், அந்த பணத்தையும் அந்த மர்ம நபர் எடுத்திருப்பது தெரியவந்துள்ளது.
அப்பாவி பழங்குடி இன மக்களை ஏமாற்றிய அந்த மர்ம நபரை கண்டுபிடித்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.