பிகில் இசை வெளியீட்டு விழா சர்ச்சை: விஜய்க்கு தேசிய கட்சி ஆதரவு
- IndiaGlitz, [Wednesday,September 25 2019]
விஜய் நடித்த 'பிகில்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய சில கருத்துக்கள் ஆளுங்கட்சியை அதிருப்தி அடைய செய்த நிலையில் விஜய்க்கு கடந்த சில நாட்களாக தமிழக அமைச்சர்கள் பதிலடி கொடுத்து கொண்டிருந்தனர். அதுமட்டுமின்றி பிகில் இசை விழாவிற்கு இடம் கொடுத்த தனியார் பொறியியல் கல்லூரிக்கு விளக்கம் கேட்டு தமிழக அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது இந்த பிரச்சனை அரசியலாகிவிட்டது. பிகில் திரைப்பட நிகழ்ச்சி நடந்ததற்காக தனியார் பொறியியல் கல்லூரிக்கு தரப்பட்ட நோட்டீஸை உயர்கல்வித்துறை திரும்பப்பெற தேசிய கட்சியான காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. பிகில் நிகழ்ச்சிக்காக கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பியது அதிகார துஷ்பிரயோகம் என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியபோது, 'கல்லூரி வளாகத்தின் வெளியே உள்ள அரங்கில்தான் விழா நடந்துள்ளது என்றும், இது மிகவும் தவறான முன்னுதாரணம் என்றும், ஒரு அமைப்பை நோட்டீஸ் அனுப்பி பயமுறுத்துவது ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல என்றும் கூறினார். மேலும் சிபிஐ, வருமான வரித்துறையை பாஜக பயமுறுத்துவது போல் பள்ளி, கல்லூரி நிர்வாகத்தை தமிழக அரசு பயமுறுத்துகின்றனர். ஒரு கல்லூரியில் திரைப்படத்துறையை சேர்ந்த ஒருவர் உரையாற்றுவதில் என்ன தவறு உள்ளது? பெரியார், அண்ணா முதல் பல தலைவர்கள் கல்லூரிகளில் உரையாற்றியுள்ளனர். கருத்து சுதந்திரம் உள்ள ஒரு நாட்டில் ஒரு கல்லூரி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்புவது அவர்களை மிரட்டுவது ஆகும் என்றும் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.