காங்கிரஸ் கொடுத்த ஆஃபர்: தட்டிக் கழித்த பிரசாந்த் கிஷோர்!!! அரசியலில் நடக்கும் சுவாரசியம்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய அரசியல் மட்டத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசியல் ஆலோசனைகளை வகுத்து கொடுப்பது சில காலமாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் சில மாதங்களுக்கு முன்பு கடும் அரசியல் நெருக்கடி நிலவியது. ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து முக்கிய பிரமுகரான ஜோதிராத்திய சிந்தியா விலகி பாஜக வோடு இணைந்து கொண்டார். அவர் கட்சியில் இருந்து விலகியபோது அவருடன் 21 எம்எல்ஏக்களும் பதவி விலகினர். தற்போது ஜோதிராதித்ய சிந்தியாவின் இடத்தோடு சேர்ந்து 24 எம்எல்ஏக்களின் இடம் அம்மாநிலத்தில் காலியாகி இருக்கிறது. காலியாக இருக்கும் சட்ட மன்றத் தொகுதிகளுக்கு தற்போது தேர்தல் வரவிருக்கிறது. வரவிருக்கும் இடைத்தேர்தலில் காங்கிரஸ்க்கு ஆதரவாக ஐபேக் நிறுவனம் செயல்பட இருக்கிறது என செய்திகள் கடந்த வாரம் வெளியாகியது. ஆனால் அச்செய்திக்குத் தற்போது பிரசாந்த் கிஷோர் மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்ட அவர், முன்னாள் முதல்வர் கமல்நாத் மட்டுமல்ல, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கும் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் பிரச்சார யுக்தியை வழங்க என்னை அணுகினார். ஆனால் நான் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ள வில்லை. காங்கிரஸ் கட்சி பணிகளை நான் துண்டு துண்டாக எடுக்க நான் விரும்பவில்லை” என்று கருத்துத் தெரிவித்து இருக்கிறார். இவர் வெளியிட்ட கருத்துப்படி ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சிக்கும் இவர் அரசியல் ஆலோசகராக செயல்பட விரும்புகிறார் என்றும் ஆனால் இதை கட்சி தலைமைதான் முடிவு செய்ய வேண்டும் என்றும் சிலர் விளக்கம் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் அபார வெற்றிக்கு ஐபேக் நிறுவனம்தான் முக்கிய காரணமாக இருந்தது என்பதப் பற்றி பல அரசியல் மட்டங்கள் கருத்து வெளியட்டன. அதற்கு பின்னர் அக்கட்சியோடு ஏற்பட்ட மனக்கசப்பால் பாஜவை விட்டு அவர் விலகியே இருக்கிறார். 2014 இல் பீகாரில் நிதீஷ்குமாரில் வெற்றிக்கு இவரது ஆலோசனைகளே பக்க பலமாக இருந்தாகவும் கூறப்பட்டது. பிரதமர் மோடியை அணுகுவதற்கு முன்பே இவர் ராகுல் காந்தியை அணுகியதாகவும் ஆனால் மிகப்பெரிய அடையாளம் கிடைக்காததால் விலகியதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால் இக்கூட்டணி கடந்த 2017 இல் பஞ்சாப் மற்றும் உத்திரப்பிரதேசம் என இரு மாநிலங்களில் கைக் கோர்த்தது. பஞ்சாப்பில் அமரிந்தர் சிங்கின் வெற்றிக்கு இவர் பெரும் பங்கு வகித்தார். ஆனால் உத்திரப் பிரதேசத்தில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. பகுஜன் சமாஜ்வாதி கட்சியோடு கூட்டணி வைக்க வேண்டாம் என பிரசாந்த் கிஷோர் கூறியதாகவும் ஆனால் கட்சி வேறு ஒரு தளத்தில் பயணித்ததால் வெற்றியை கணிக்க முடியவில்லை என்றும் கூறப்பட்டது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தலைமையாக திருமதி பிரியங்கா காந்தியை நியமிக்குமாறு இவர் வலியுறுத்தியதாகவும் கூறப்பட்டது. உத்திரப் பிரதேசத்தின் தோல்விக்கு பின்னர் வேறு எந்த மாநில பிரச்சாரங்களிலும் இவர் காங்கிரஸோடு கூட்டணி வைத்துக் கொள்ளவில்லை.
தெலுங்கானாவில் ஜெகன் மோகன் ரெட்டியின் அபார வெற்றிக்குப் பின்னால் இவரே இருந்தார் என்பதும் இந்தாண்டு டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்குப் பின்னாலும் இவரே அரசியல் ஆலோசனைகளை வகுத்து கொடுத்தார் என்பதும் அனைவரும் அறிந்தது. பாஜக கட்சியில் இருந்து மிகவும் விலகிவிட்ட ஐபேக் நிறுவனம் காங்கிரஸோடு இணைந்து பணியாற்ற விரும்புகிறது எனவும் ஆனால் கொள்கை அளவில் மிகவும் தெளிவான முடிவுகளை எடுப்பதற்கு இன்னும் அதிக அங்கீகாரம் தேவைப்படுகிறது என்றும் முக்கிய வட்டாரங்கள் பேசிக் கொள்கின்றன. தமிழகத்தில் வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக விற்கு இவரே அரசியல் நுணுக்கங்களை வகுத்துக் கொடுத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Kiara Nithya
Contact at support@indiaglitz.com
Comments