முதல்வர் கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் எம்.எல்.ஏவுக்கு கொரோனா உறுதி
- IndiaGlitz, [Wednesday,April 15 2020]
குஜராத் மாநிலத்தில் முதலமைச்சர் நடத்திய கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் சமீபத்தில் முதலமைச்சர் விஜய் ரூபானி தலைமையில் தலைநகர் காந்தி நகரில் உள்ள முதல்வர் இல்லத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் நிதின் பட்டேல், மாநில உள்துறை அமைச்சர் பிரதீப்சின் ஜடேஜா மற்றும் ஒருசில எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் காலையில் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட ஹாடியா-ஜமால்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ இம்ரான் ஹிடவால என்பவருக்கு மாலையில் திடீரென கொரோனா தொற்று அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதனையடுத்து முதல்வரின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் உள்பட அனைவருக்கும் கொரோனா சோதனை நடத்த குஜராத் சுகாதாரத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.