மோடி செங்கோட்டையையும் தாஜ்மஹாலையும் கூட தனியாருக்கு விற்க போகிறார்..! ராகுல் காந்தி விமர்சனம்.
- IndiaGlitz, [Wednesday,February 05 2020]
நேற்று புது டெல்லியில் பேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியைக் கடுமையாக சாடினார். 'மேக் இன் இந்தியா' என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துகிறார் பிரதமர், ஆனால் இன்று வரை ஒரு தொழிசாலை கூட இந்தியாவில் தொடங்கப்படாதது வேதனை அளிக்கிறது என்று கூறினார் ராகுல்.
தற்போது மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் நாட்டில் உள்ள அனைத்தையும் தனியாருக்கு விற்று வருகின்றனர் என்று ராகுல் கூறினார்.
'இந்தியன் ஆயில் நிறுவனம் தொடங்கி, இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்திய ரயில்வே, ஏன் செங்கோட்டையையும் அவர் விட்டுவைக்கவில்லை. இந்த நிலை நீடித்தால் அவர்கள் ஒரு நாள் தாஜ் மஹாலையும் விற்றுவிடுவார்கள்' என்று தெரிவித்தார் ராகுல். கடந்த வாரம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நேரம் தொடங்கி, பாஜக-வை காங்கிரஸ் கட்சியும் ராகுல் காந்தியும் கடுமையாக சாடி வருகின்றனர்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட அன்று பேசிய ராகுல் காந்தி, 'வரலாற்றில் மிக நீளமான பட்ஜெட் தாக்கல் என்றபோது, அதில் முக்கிய பிரச்சனையான வேலையில்லா திண்டாட்டத்திற்கு எந்த பதிலும் அளிக்கப்படவில்லை' என்று குறிப்பிட்டார். மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில், 'எனது கேள்விகளைக் கண்டு அஞ்ச வேண்டாம். நான் இந்தியாவில் உள்ள வேலையில்லா பட்டதாரிகள் சார்பில் உங்களை கேள்வி கேட்கின்றேன்' என்று நிர்மலா சீதாராமனை சீண்டியிருந்தார் ராகுல் என்பதும் குறிப்பிடத்தக்கது.