பூரண மதுவிலக்கு முதல் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்குவது வரை- காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
- IndiaGlitz, [Wednesday,March 17 2021]
தமிழகத்தில் வரும் ஏப்ரல்-6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சி அதன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதை அக்கட்சியின் மாநிலத்தலைவர் கே.எஸ் அழகிரி வெளியிட்டுள்ளார். திமுக-வுடன் கூட்டணி அமைத்துள்ள, காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
’அராஜக அதிமுக ஆட்சியை அகற்றுவதே காங்கிரஸின் நோக்கம்’ என்று தலைப்பிடப்பட்ட தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இதில் பூரண மதுவிலக்கு, அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்குவது உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதில் குறிப்பிட்டுள்ள சிலவற்றையும் இதில் பார்க்கலாம்.
• கல்வி, வேலைவாய்ப்புகள் பெண்களுக்கு சமவாய்ப்புகள் வழங்குதல்
• தமிழகத்தின் அனைத்து துறை சார்ந்த தகவல்களும், தினந்தோறும் இணையதளத்தில் வெளியிடப்படும்
• சென்னை மாநகராட்சியை தரம் உயர்த்துவோம்.
• புதிய அரசு ஆட்சி அமைக்கப்பட்டதும் பூரண மதுவிலக்கு
• மீனவர்களை, பழங்குடியினர் வகுப்பில் சேர்க்க வலியுறுத்தல்
• அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க நடவடிக்கை எடுக்கப்படும்
• அரசு நிர்வாகம் மற்றும் டெண்டர்களை பெறுவதில் வெளிப்படைத்தன்மை இருக்கும்.
• ஆணவக்கொலையை தடுக்க புது சட்டம் எடுக்கப்படும்
• தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்க புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவோம்.
• புதிதாக தொழில் துவங்குபவர்களுக்கு 5 வருடங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும்.
• நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுதல்.
• உள்ளாட்சிகளுக்கு அதிகாரத்தை மீண்டும் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும்.
• நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தப்படும்.
• முடக்கம் செய்யப்பட்ட உழவர் சந்தைகளை மீண்டும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
இது போன்ற பல முக்கிய அம்சங்களையும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.