வெளிமாநிலத் தொழிலாளர்களின் பயணச் செலவை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளும்!!! சோனியாகாந்தி அறிவிப்பு!!!
- IndiaGlitz, [Monday,May 04 2020]
இந்தியாவில் முன்னர் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நேற்றோடு முடிவடைந்து மீண்டும் மே 17 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இடையில் 4 மணிநேரம் அவகாசம் அளிக்கப்படும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து இருந்தது. இந்த 4 மணிநேர அவகாசத்தில் நீண்ட தொலைவில் வேலைப்பார்த்து வந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலத்திற்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்துகொள்ள முடியவில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது. மேலும், வெளிமாநிலத் தொழிலாளர்களிடம் போக்குவரத்துக் கட்டணம் வசூலிக்கப்படக் கூடாது என்ற கோரிக்கையும் முன்னதாக வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் பயணக் கட்டணம் குறித்த எந்த சலுகையையும் மத்திய அரசு வழங்காத நிலையில் வெளிமாநிலத் தொழிலாளர்களின் பயணச் செலவை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்ளும் என இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
அந்த அறிவிப்பில் “நம் தொழிலாளர்கள் நம் பொருளாதாரத்தின் முதுகெலும்பு, அவர்களது கடின உழைப்பும் தியகமும் நமது நாட்டின் அஸ்திவாரம் எனக் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் “நான்கு மணிநேர அவகாசத்தில் மத்திய அரசு ஊரடங்கை அறிவித்ததால், வெளிமாநிலத் தொழிலாளர்களால் தங்கள் ஊருக்குச் திரும்ப முடியவில்லை. 1947 பிரிவினைக்குப் பிறகு இவ்வளவு பெரிய அளவில் துயரம் நிகழ்வது இப்போதுதான். ஆயிரக்கணக்கான வெளிமாநிலத் தொழிலாளர்கள் உணவு, மருந்து, பணம், போக்குவரத்து ஏதுமின்றி தங்கள் வீட்டிற்குத் திரும்ப வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு பல நூறு மைல் நடந்து வீடு திரும்புகிறார்கள். அவர்களுடைய நிலையை நினைத்துப் பார்த்தாலே நமது இதயம் உடைந்துவிடும்” எனத் தனது டிவிட்டர் பதிவில் சோனியா காந்தி குறிப்பிட்டு இருக்கிறார்.
வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு திரும்பிய பயணிகளிடம் இந்திய அரசு எந்தக் கட்டணத்தையும் வசூலிக்கவில்லை. இந்நிலையில் வெளிமாநிலங்களில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்களிடம் அரசாங்கம் இப்படி நடந்துகொள்வது முறையல்ல எனவும் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார். மேலும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பயணக் கட்டணத்தை அந்தந்த மாநிலங்களில் காங்கிரஸ் கமிட்டி பொறுப்பேற்றுக் கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிறப்பு பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்தின் மூலம் வெளிமாநிலங்களில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க மத்திய அரசு இன்னும் அதிகமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
कांग्रेस अध्यक्षा, श्रीमती सोनिया गांधी का बयान
— Congress (@INCIndia) May 4, 2020
भारतीय राष्ट्रीय कांग्रेस ने यह निर्णय लिया है कि प्रदेश कांग्रेस कमेटी की हर इकाई हर जरूरतमंद श्रमिक व कामगार के घर लौटने की रेल यात्रा का टिकट खर्च वहन करेगी व इस बारे जरूरी कदम उठाएगी। pic.twitter.com/DWo3VZtns0