பிசிசிஐயின் புது டிரிக்… சென்னை டெஸ்ட் மேட்சில் ரசிகர்களுக்கு அனுமதி கிடைக்குமா?

இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தின்போது அங்கு நடைபெற்ற பல கிரிக்கெட் போட்டிகளில் பார்வையாளர்களுக்கு சமூக இடைவெளியோடு அனுமதி வழங்கப்பட்டது. அதே நேரத்தில் தற்போது கொரோனா தடுப்பூசியும் பயன்பாட்டிற்கு வந்து விட்டது. இந்நிலையில் இந்தியாவில் நடைபெறும் இங்கிலாந்து உடனான கிரிக்கெட் போட்டிகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடைக்குமா என்ற எதிர்ப்பார்ப்பும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டு இருந்த அறிவிப்பில் முதல் 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளைக் காண பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. ஆனால் அகமதாபாத்தில் நடைபெறும் கடைசி 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பார்வையாளர்கள் அனுமதிக்கப் படுவார்கள் என்று பிசிசிஐ தெரிவித்து இருந்தது. இந்நிலையில் தற்போது பிப்ரவரி மாதத்திற்கான கொரோனா வழிகாட்டுதல் அறிவிப்பில் 50% ரசிகர்களை அனுமதிக்கலாம் என தமிழக அரசு குறிப்பிட்டு இருக்கிறது.

இதையடுத்து சென்னையில் நடைபெற உள்ள 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு 50% பார்வையாளர்களை அனுமதிப்பது குறித்து பிசிசிஐ மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இரண்டும் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனால் சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் மொத்த இருக்கையான 30 ஆயிரத்தில் இருந்து பாதி அளவான 15 ஆயிரம் முதல் 19 ஆயிரம் பார்வையாளர்கள் வரை அனுமதிக்கப் படலாம் என்றும் இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் விரைவில் அறிவிக்கும் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் கொரோனா அச்சம் காரணமாக சென்னையில் நடைபெற இருக்கும் இங்கிலாந்து மற்றும் இந்தியாவிற்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்பதை உறுதியாக பிசிசிஐ தெரிவித்து இருக்கிறது. இந்தப் போட்டியில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் போட்டியில் கலந்து கொள்ள கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் ஆகியோர் மட்டுமே இடம் பெறுவார்கள் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்து உள்ளது.