4 வயது சிறுமிக்காக பென்சில் நிறுவனம் எடுத்த நெகிழ வைக்கும் புதிய முயற்சி
- IndiaGlitz, [Saturday,December 16 2017]
பொதுவாக இடதுகை பழக்கம் உள்ளவர்களால் வலதுகை பழக்கம் உள்ளவர்கள் போல் எளிமையாக அனைத்து செயல்களையும் செய்ய முடியாது. ஏனெனில் பெரும்பாலான தயாரிப்புகள் வலதுகை பழக்கம் உள்ளவர்களுக்கு வசதியானதாகவே தயாரிக்கப்பட்டிருக்கும்
இந்த நிலையில் மும்பையை சேர்ந்த இடதுகை பழக்கம் உள்ள நான்கு வயது சிறுமியின் தாயார் ஸ்வேதாசிங் என்பவர் தனது மகள் பென்சிலை சீவும்போது சந்திக்கும் பிரச்சனை குறித்து பிரபல நிறுவனமான ஹிந்துஸ்தான் பென்சில் நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றை எழுதினார். இடதுகை பழக்கம் உள்ள தனது மகளை போன்றவர்களுக்காக பிரத்யேகமாக ஷார்ப்னர் தயாரிக்கலாமே? என்றும் அவர் ஆலோசனை கூறியிருந்தார்
ஸ்வேதாசிங் அவர்களின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து அந்த நிறுவனம் இடதுகை பழக்கம் உள்ளவர்களுகான பிரத்யேகமான ஐந்து ஷார்ப்னர்களை தயாரித்து அவருக்கு அனுப்பி வைத்தது. இந்த ஷார்ப்னர் மூலம் உங்கள் மகள் எளிதில் பென்சிலை சீவிக்கொள்வார் என்று தாங்கள் நம்புவதாகவும், இந்த முயற்சியை மேலும் தொடர்ந்து நீடிக்க முயற்சிப்பதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தை ஸ்வேதாசிங் தனது ஃபேஸ்புக்கில் பதிவு செய்திருந்த நிலையில் இந்த கடிதம் தற்போது சமூக இணையதளங்களில் வைரலாகி வருகிறது நான்கு வயது சிறுமிக்காக அந்த நிறுவனம் எடுத்த நெகிழ வைக்கும் புதிய முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்துவருகிறது.