காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு பெருமை சேர்த்த தமிழக வீரர்
- IndiaGlitz, [Saturday,April 07 2018]
ஆஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களாக காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்தியா தனது பதக்க வேட்டையை தொடங்கி வெற்றி நடைபோட்டு வருகிறது. இதுவரை இரண்டு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கல பதக்கங்களை வென்றுள்ள நிலையில் இன்று இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது. இந்த பதக்கத்தை தமிழக வீரர் ஒருவர் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று நடைபெற்ற 77 கிலோ பளுதூக்குதல் பிரிவில் தமிழகத்தின் வேலூரை சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கம் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். சதீஷ்குமார் சிவலிங்கம் கடந்த ஆண்டு ஸ்காட்லாந்து நாட்டில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தங்கம் வென்ற தமிழக வீரருக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இந்த நிலையில் இந்தியா தற்போது வரை மூன்று தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் என மொத்தம் ஐந்து பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் ஆஸ்திரேலியா 14 தங்கம், 11 வெள்ளி, 16 வெண்கலம் என மொத்தம் 41 பதக்கங்கள் பெற்று முதலிடத்திலும், இங்கிலாந்து 12 தங்கம், 8 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் என மொத்தம் 23 பதக்கங்கள் வென்று இரண்டாவது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.