சசிகலா அதிமுகவில் இருந்து விலகிய பிரபல நகைச்சுவை நடிகை
- IndiaGlitz, [Thursday,March 23 2017]
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முன்பு கடந்த 2014ஆம் ஆண்டு அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இணைந்த பிரபல நகைச்சுவை நடிகை ஆர்த்தி, அதிமுகவில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதம் ஒன்றை டிடிவி தினகரனுக்கு அனுப்பியுள்ளார். எனக்கு திரையில் மட்டுமே நடிக்க தெரியும் என்றும் அரசியலில் நடிக்க தெரியாததால் அதிமுகவில் இருந்து விலகுவதாகவும் அவர் தனது ராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
ஆர்த்தி தனது ராஜினாமா கடிதத்தில் மேலும் கூறியிருப்பதாவது:
"ஜெயலலிதா மீது கொண்ட அன்பாலும், அவரின் தைரியம், செயல்பாடுகள், தன்னம்பிக்கை போன்ற குணங்களால் ஈர்க்கப்பட்டு, கடந்த 2014-ம் ஆண்டு அ.தி.மு.க-வில் இணைந்தேன். பிறகு, அ.தி.மு.க-வின் நட்சத்திரப் பேச்சாளராகப் பணியாற்றிவந்தேன். ஆனால், கழகத்தில் தற்போது நடந்துவரும் சம்பவங்களால், என் மனது புண்பட்டுவிட்டது. ஜெயலலிதாவின் உழைப்புக்கும், புகழுக்கும் அனைவரும் களங்கத்தை ஏற்படுத்திவிட்டோம்.
வருகின்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலைச் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் முடக்கிவிட்டது. இதுதான் அனைவரின் சுயநலத்துக்கும் கிடைத்த பரிசு. இதுதான் அம்மாவின் ஆசையா; நாம் அவருக்கு கொடுக்கும் சன்மானமா; நம் அம்மாவை இழந்தாலும் அவரது கனவுகளை மறக்கலாமா.
இவை அனைத்தையும் மறந்து, கட்சியை உடைப்பதும், அம்மா நினைவிடத்தில் நாடகம் நிகழ்த்துவதும், அம்மா, அம்மா என உதட்டளவில் உச்சரித்துவிட்டு, அவருக்குப் பிடிக்காத செயல்களில் ஈடுபடுவதும் எனக்கு வேதனையைத் தருகிறது. உலகமே இதைப் பார்த்து எள்ளி நகையாடுகிறது. நம் கழகத்தின் மீது ஏற்பட்டுள்ள களங்கத்தைத் துடைப்பதை விடவா பதவி, ஆட்சி அதிகாரம் முக்கியம்.
இதை எல்லாம் பார்த்துக் கண்டுகொள்ளாமல் இருக்க என்னால் முடியவில்லை. கோஷ்டி மோதல்கள் எரிச்சல் ஊட்டுகிறது. சின்னத்துக்காக சண்டைபோடுவதை விட்டு விட்டு, மக்களின் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
நான் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நுழைந்து, இன்று நடிகையாக திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறேன். ஆனால், எனக்கு அரசியலில் நடிக்கத் தெரியாததால், மிகவும் வேதனையுடன், அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்கிறேன்
இவ்வாறு ஆர்த்தி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.