எனக்கு குரு, தெய்வம் எல்லாமே அவர்தான்: மொட்டை ராஜேந்திரனின் நெகிழ்ச்சியான வீடியோ!

தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவராகிய மொட்டை ராஜேந்திரன் இதற்கு முன் ஸ்டண்ட் கலைஞராக இருந்து அதன்பின் பாலாவின் ’பிதாமகன்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தனது திரையுலக வாழ்க்கை குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:

என்னை மொட்டை ராஜேந்திரன் என்று அனைவரும் அன்போடு அழைத்து வருகின்றனர். என்னுடைய திரையுலக வரலாறு என்னவெனில் என்னுடைய தந்தை, என்னுடைய பெரிய அண்ணன், மற்றும் சின்ன அண்ணன் ஆகிய மூவருமே சண்டை கலைஞர்கள்தான். எனவே இவர்கள் மூன்று பேர்களின் பாதையில் நானும் ஒரு சண்டை கலைஞராக திரையுலகில் அறிமுகமாகி, தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நான் சண்டை கலைஞராக பணிபுரிந்துள்ளேன்.

இயக்குனர் பாலாவின் ’பிதாமகன்’ என்ற படத்தில் சண்டை கலைஞராக பணிபுரியும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த படத்தில் அவர் என்னை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டதோடு எனக்கு ஒரு கேரக்டரும் கொடுத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதன் பின்னர் ’நான் கடவுள்’ படத்தில் என்னை வில்லனாக அறிமுகப்படுத்துவதாக கூறினார். எனக்கு ஒரு பக்கம் சந்தோசமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் வில்லன் கேரக்டரில் நடிக்க முடியுமா? என்று பயமாகவும் இருந்தது. ஆனால் பாலா அவர்கள் எனக்கு ஆறுதல் கூறி ’நான் பார்த்து கொள்கிறேன் நீ நடி’ என்று எனக்கு தைரியம் கூறினார். பாலா அவர்களும் கேமராமேன் வில்சன் அவர்களும் இணைந்து என்னை ஊக்குவித்து நடிகனாக்கினார்கள்.

அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. என்னுடைய பெயர் எல்லோருக்கும் தெரிய ஆரம்பித்தது. என்னுடைய முதல் குரு மற்றும் முதல் தெய்வம் பாலா சார் அவர்கள் தான். அதன் பின்னர் ’பாஸ் என்ற பாஸ்கரன்’ படத்தில் ஒரு காமெடி கேரக்டரில் நடித்தேன். அந்த படமும் வெற்றி பெற்றது எனக்கு இன்னும் மகிழ்ச்சியாக இருந்தது. அப்படியே என்னுடைய திரையுலக பயணம், சண்டை கலைஞராக ஆரம்பித்து வில்லன் மற்றும் காமெடி நடிகர் என போய்க்கொண்டிருக்கிறது. என்னை மொட்டை ராஜேந்திரன் என அனைவரும் அன்போடு கூப்பிடும் அளவுக்கு எனக்கு அங்கீகாரம் கிடைத்தது, மிகப்பெரிய சந்தோஷம்’ என்று மொட்டை ராஜேந்திரன் கூறியுள்ளார்.