காமெடி நடிகர் மயில்சாமி திடீர் மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி..!
- IndiaGlitz, [Sunday,February 19 2023]
தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான மயில்சாமி திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 57.
சென்னை விருகம்பாக்கத்தில் இருந்த மயில்சாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. அவரது இறப்பிற்கு திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மயில்சாமி கடந்த 1965 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகம் ஆகி அதன் பின்னர் காமெடி நடிகராக திரையுலகில் நடித்தார். பாக்யராஜ் இயக்கி நடித்த ’தாவணி கனவுகள்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு அவர் பல திரைப்படங்களில் காமெடி மட்டும் குணசித்திர வேடங்களில் நடித்தார்.
ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய், அஜித், விக்ரம், சூர்யா உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த மயில்சாமி 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக அவர் ’உடன்பால்’ என்ற படத்தில் நடித்த நிலையில் அவர் இன்று காலமானார்.
ஆன்மீகம் அரசியல் ஆகியவற்றில் ஈடுபாடு உள்ள மயில்சாமி கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டார். மேலும் கொரானா காலத்தில் ஏராளமான சமூக சேவைகளையும் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மயில்சாமியின் மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் விரைவில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.