இந்தியன் என்று கூறியது போதும், இனி நாம் தென்னிந்தியன்: பிரபல காமெடி நடிகர்!
- IndiaGlitz, [Sunday,September 20 2020]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நீட் தேர்வு குறித்த சர்ச்சை மிகப்பெரிய அளவில் பரவி வந்தது. குறிப்பாக நடிகர் சூர்யா இது குறித்து அறிக்கை வெளியிட்டவுடன் பல திரையுலக பிரபலங்களும் நீட் தேர்வு குறித்து தங்களுடைய கருத்தை தெரிவித்தனர்
இந்த நிலையில் அவ்வப்போது சமூக கருத்துக்களை தொலைக்காட்சி விவாதங்களில், பேட்டிகளிலும் தெரிவித்து வரும் காமெடி நடிகர் மயில்சாமி சமீபத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நடந்த உண்ணாவிரதம் ஒன்றில் கலந்து கொண்டு நீட் தேர்வு குறித்து தனது கருத்தை ஆவேசமாக தெரிவித்தார்
பதவி இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என ஆளும் கட்சியினர் நினைக்க கூடாது என்றும் பெற்றோர்களின் சாபத்திற்கு ஆளாக வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்
மேலும் இதுவரை இந்தியன் என்று கூறியது போதும் என்றும் இனிமேல் நாம் தென்னிந்தியன் எனக் கூற வேண்டும் என்றும் அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது நான் எந்த கட்சியிலும் இல்லை என்றும், தனக்கு எந்த கட்சியின் சாயமும் பூச வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்
மத்திய அரசு எதைக் கூறினாலும் அதை கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்து போட கூடியவர்களே தமிழகத்தில் முதலமைச்சராக இருக்கிறார்கள் என்றும் அவர் தமிழக அரசு குறித்தும் விமர்சனம் செய்தார். காமெடி நடிகர் மயில்சாமியின் மத்திய மாநில அரசு குறித்த இந்த விமர்சனம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது