காமெடி நடிகர் தாமுவுக்கு மத்திய அரசின் கெளரவ விருது!

  • IndiaGlitz, [Friday,April 23 2021]

இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் இயக்கிய ’வானமே எல்லை’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி விஜய்யின் ’கில்லி’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த காமெடி நடிகர் தாமுவுக்கு மத்திய அரசின் கௌரவ விருது கிடைத்துள்ளது.

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் ஆகிய தாமு, கல்வித் துறையில் கடந்த 10 ஆண்டுகளாக ஆற்றிய சேவைக்கு பாராட்டு தெரிவித்து தேசிய கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையம் தேசிய கல்வியாளருக்கான கெளரவ விருதான ’ராஷ்டிரிய சிக்ஷா கவுரவ் புரஸ்கார் 2021’ என்ற விருதை அளித்துள்ளது.

கல்வித் துறையில் கடந்த 10 ஆண்டுகளாக தாமு சேவை செய்து வருகிறார் என்பதும் இவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் அவர்களால் கல்வித்துறைக்கு மாணவர்களின் வளர்ச்சிக்கு பயிற்சி அளிக்க நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனக்கு கிடைத்த இந்த கௌரவ விருது குறித்து நடிகர் தாமு கூறியபோது மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் நடிகர் விவேக்கை எப்படி பசுமைப் புரட்சியை ஏற்படுத்த நியமனம் செய்தாரோ, அதே போல் என்னை மாணவர்களின் வளர்ச்சிக்கு பயிற்சி அளிக்க நியமித்தார். இந்தியா வளர்ச்சி அடைவதற்கு கலாம் பல்வேறு நபர்களை நியமித்து பொறுப்புகளை ஒப்படைத்து உள்ளார் என கூறினார்.

மேலும் தற்போதைய சூழ்நிலையில் ஆன்லைன் கல்வியால் மாணவர்களின் வளர்ச்சிக்கு பயனில்லை என்றும் இந்த கல்வி முறை 25 சதவீத மாணவர்களுக்கு மட்டுமே பயன் அளிக்கிறது என்றும் ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக வேறு வழியின்றி ஆன்லைன் கல்வி ஊக்குவிக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

மத்திய அரசின் கெளரவ விருது பெற்ற நடிகர் தாமுவுக்கு திரையுலகினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.