சர்ச்சைக்கு பதில் சந்தோஷம்: 'கோமாளி' பட இயக்குனர்-தயாரிப்பாளர் விளக்கம்

  • IndiaGlitz, [Monday,August 05 2019]

ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' திரைப்படத்தின் டிரைலரில் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து சர்ச்சைக்குரிய காட்சி ஒன்று இருந்ததற்கு ரஜினி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில் இதுகுறித்து இந்த படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மற்றும் இயக்குனர் பிரதீப் ஆகியோர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியதாவது:

'கோமாளி' திரைப்படத்தின் டிரைலர் நேற்று முன்தினம் ரிலீஸ் ஆகியது. இந்த டிரைலரை சுமார் 40 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். இந்த டிரைலரை பார்த்த அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் ஒரு சிலர் மட்டும் இந்த டிரைலரை பார்த்து மனம் கவலைப்பட்டுள்ளனர். இதில் நான் கூறுவது என்னவெனில் நான் ரஜினி அவர்களின் மிகப்பெரிய ரசிகன் என்று ஐசரி கணேஷ் கூறினார்.

அப்போது குறுக்கிட்ட இயக்குநர் பிரதீப், 'நானும் ரஜினி அவர்களின் மிகப்பெரிய ரசிகன். இந்த காட்சியை ஒரு ஜாலியான காட்சிக்காகவே நாங்கள் படமாக்கினோம். பெரும்பாலான ரஜினி ரசிகர்களும் இந்த காட்சியை அவ்வாறே பார்த்தனர். ஆனால் ஒரு சிலர் மட்டும் மனம் வருத்தப்பட்டதாக டுவிட்டர் மூலம் தெரிவித்தனர். ஒருவேளை இந்த காட்சி ரஜினி ரசிகர்களை வருத்தப்படும்படி செய்து இருந்தால் கண்டிப்பாக இந்த காட்சியை நீக்கி விடுகிறோம் என்று கூறினார்

அப்போது ஐசரி கணேஷ் கூறியபோது 'இந்த காட்சியை பார்த்த கமல்ஹாசன் தன்னிடம் போன் செய்து வருத்தப்பட்டதாகவும், அப்போது அவரிடம் நீங்கள் வருத்தப்படும் அளவுக்கு இந்த காட்சி இருந்தது என்றால் கண்டிப்பாக நான் அந்த காட்சியை நீக்கி விடுகிறேன் என்று அவரிடம் உறுதி கூறியதாகவும் தெரிவித்தார். இதனை அடுத்து இந்த காட்சியை நீக்கும்படி இயக்குனர் பிரதீப் அவர்களிடம் ஆலோசனை கூறி உள்ளேன் என்று கூறினார். மேலும் ரஜினி அவர்களுடன் நான் '2.0' படத்தில் நடித்துள்ளேன். கோடான கோடி ரசிகர்களில் ஒருவனாக நானும் ரஜினி அவர்கள் விரைவில் அரசியலுக்கு வர வேண்டும் என்று விரும்புபவன். எனவே ரஜினி ரசிகர்கள் அனைவரும் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி 'கோமாளி' படத்தை திரையரங்கிற்கு வந்து பார்க்க வேண்டும். இது ஒரு சமூக விழிப்புணர்வு உள்ள ஒரு படம் என்று கூறினார்

அதன் பின்னர் இயக்குநர் பிரதீப் கூறியபோது 'ரஜினி ரசிகர்கள் அனைவரும் சந்தோஷப்படும் வகையில் அந்த சர்ச்சைக்குரிய காட்சியை வேறு விதமாக நாங்கள் மாற்றியுள்ளோம். அந்த காட்சியை பார்த்து ரஜினி ரசிகர்கள் அனைவரும் படம் பார்த்து விட்டு திரும்பும்போது சந்தோஷத்துடன் திரும்புவார்கள் என்பதை உறுதி அளிக்கிறேன் என்று கூறினார்