ஒரு மணி நேரத்தில் கலர் ஜெராக்ஸ் போலி டோக்கன்கள்: மதுப்பிரியர்கள் கைது
- IndiaGlitz, [Saturday,May 16 2020]
ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த 40 நாட்களாக மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் மே 7-ஆம் தேதி திறக்கப்பட்டது. மே 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 300 கோடி ரூபாய்க்கு மது பாட்டில்கள் விற்பனையான நிலையில் திடீரென சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக 9ஆம் தேதி மதுக்கடைகள் மூடப்பட்டன. அதன் பின்னர் தமிழக அரசு மேல் முறையீடு செய்ததை அடுத்து உச்ச நீதிமன்றம் நேற்று மதுக் கடைகளைத் திறக்கலாம் என்று அனுமதி அளித்தது.
இதனையடுத்து இன்று காலை 10 மணிக்கு மதுக்கடைகள் திறக்கப்பட்டன. மது வாங்க வருபவர்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வண்ணத்தில் டோக்கன் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை 8 மணி முதலே மது வாங்க வரிசையில் நின்றவர்களுக்கு டோக்கன் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த டோக்கன் வழங்கப்பட்ட ஒரே மணி நேரத்தில் கலர் ஜெராக்ஸ் கடையில் ஒருசிலர் டோக்கன்களை ஜெராக்ஸ் எடுத்து வரிசையில் நின்றதாக கூறப்பட்டது. குறிப்பாக கடலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள மதுக் கடையில் கலர் ஜெராக்ஸ் டோக்கனை பயன்படுத்தி மதுபாட்டில்கள் வாங்க முயற்சித்த 16 பேர் கைது செய்யப்பட்டதாக வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இதனையடுத்து தமிழகம் முழுவதும் கலர் ஜெராக்ஸ் டோக்கன்கள் மூலம் மது வாங்க முயற்சிக்கலாம் என்ற அடிப்படையில் தற்போது டோக்கன்களை சோதனை செய்யும் நடவடிக்கையில் டாஸ்மாக் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.