கல்லூரி தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறுமா? அமைச்சர் விளக்கம்!
- IndiaGlitz, [Friday,January 28 2022]
கொரோனா ஊரடங்கில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டதை அடுத்து கல்லூரி மாணவர்கள் அனைவரும் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் கல்லூரிக்கு வரவேண்டும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார். ஆனால் 1, 3, 5 ஆவது செமஸ்டர் தேர்வுகளை எழுதும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாகவே தேர்வுகள் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பிப்ரவரி 1 ஆம் தேதியில் இருந்து கல்லூரிகள் திறக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனால் கல்லூரி தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படுமா? அல்லது நேரடித்தேர்வுகள் நடத்தப்படுமா என்ற சந்தேகம் இருந்துவந்தது.
இந்நிலையில் விழுப்புரத்தில் இன்றுகாலை செய்தியாளர்களைச் சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழகத்தில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு 1,3, 5 ஆவது செமஸ்டர் தேர்வுகள் ஏற்கனவே அறிவித்தப்படி ஆன்லைனிலேயே நடைபெறும்.
எனவே மாணவர்கள் ஆன்லைன் தேர்வு நடைபெறும் நாட்களில் தங்களது வீடுகளிலேயே இருந்தபடி ஆன்லைனில் தேர்வுகளை எழுதலாம்.
ஆனால் மற்ற நாட்களில் கல்லூரிக்கு வரவேண்டும். மேலும் கல்லூரிகளில் நடத்தப்படும் செய்முறைத் தேர்வுகளில் கலந்துகொள்ள வேண்டும். கல்லூரிகள் திறப்பு என்பதை மாணவர்கள் இப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டும் என்று விளக்கம் அளித்துள்ளார்.
கல்லூரிகளைத் தவிர தமிழகத்தில் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. மேலும் இந்த ஞாயிற்றுக் கிழமைகளில் இனி ஊரடங்கு இல்லை. இரவுநேர ஊரடங்குகளும் விலக்கிக் கொள்ளப்பட்டு இருக்கிறது.