குளத்தில் நண்பன் மூழ்கியது கூட தெரியாமல் செல்பியில் மூழ்கிய கல்லூரி மாணவர்கள்

  • IndiaGlitz, [Tuesday,September 26 2017]

கோவில் குளம் ஒன்றில் கல்லூரி மாணவர்கள் குளித்து கொண்டிருந்தபோது உடன் குளித்து கொண்டிருந்த நண்பர் ஒருவர் மூழ்கியதை கூட கவனிக்காமல் செல்பி மோகத்தில் மூழ்கிய கல்லூரி மாணவர்களால் பரிதாபமாக ஒரு உயிர் பலியாகியுள்ளது.

பெங்களூரை சேர்ந்த 17 வயது விசுவாஸ் என்ற மாணவர் சக மாணவர்களுடன் இணைந்து தேசிய மாணவர் படை முகாம் ஒன்றுக்கு சென்றிருந்தார். அங்கு உள்ள ஆஞ்சநேயர் கோவில் குளம் ஒன்றில் நண்பர்களுடன் சேர்ந்து விசுவாஸ் குளித்தார். நீச்சல் தெரியாத விசுவாஸ் திடீரென குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்றதால் உயிருக்கு போராடியுள்ளார்.

ஆனால் இதை எதையும் கவனிக்காத அவருடைய நண்பர்கள் செல்பி எடுப்பதில் மும்முரமாக இருந்துள்ளனர். பின்னர் குளித்துவிட்டு கரையேறியபோதுதான் விசுவாஸை காணாததை அறிந்தனர். அப்போது செல்பி புகைப்படத்தை பார்த்தபோது புகைப்படத்தில் விசுவாஸ் மூழ்குவது தெரிந்ததால் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து விசுவாஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உலகம் முழுவதும் செல்பி மோகத்தால் பல உயிர்கள் பலியாகி வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு உயிர் பலியானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது