குடும்ப பெண்ணை ஆபாசமாக மார்பிங் செய்து கணவருக்கு அனுப்பிய கல்லூரி மாணவன்!

  • IndiaGlitz, [Saturday,May 30 2020]

சமூக வலைதளங்கள் மூலம் பள்ளி, கல்லூரி, பெண்கள் முதல் குடும்ப பெண்கள் வரை நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை சீரழித்த நாகர்கோவில் காசி வழக்கின் பரபரப்பே இன்னும் முடிவடையாத நிலையில் தற்போது மேலும் ஒரு நிகழ்வாக கல்லூரி மாணவர் ஒருவர் குடும்பப் பெண்ணை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பரமக்குடி என்ற பகுதியை சேர்ந்த ரோஹித் என்பவர் தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது பகுதியில் உள்ள குடும்பப் பெண் ஒருவரின் முகநூல் பக்கத்திலிருந்து புகைப்படத்தை எடுத்து அந்த புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக மாற்றி அந்த பெண்ணின் கணவருக்கு அனுப்பியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த கணவரிடம் ரூபாய் 20,000 கேட்டு ரோஹித் மிரட்டி உள்ளதாக தெரிகிறது.

இது குறித்து அந்த பெண்ணின் கணவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து கல்லூரி மாணவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். மேலும் பெண்ணின் புகைப்படங்களை ரோஹித்துக்கு ஆபாசமாக மார்பிங் செய்து கொடுப்பதில் இரண்டு நண்பர்கள் உதவியாக இருந்ததாகக் கூறப்படுவது. அதனை அடுத்து அவர்களும் கைது செய்யப்பட்டு தற்போது விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.

மேலும் இந்த கல்லூரி மாணவர்கள் பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிடுவதற்காகவே போலி கணக்கு முகநூலில் உருவாக்கி உள்ளனர் என்பதும் அந்த கணக்கை தற்போது போலீசார் முடக்கி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. முதலாம் ஆண்டு படிக்கும் போதே குடும்ப பெண்களை மார்பிங் செய்யும் கல்லூரி மாணவர்களின் கொடூர செயல் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.