ஜுஸில் விஷம் வைத்த காதலி... சதிவலையில் சிக்கி அப்பாவியாக காதலன் உயிரிழந்த சம்பவம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில தினங்களுக்கு முன்பு கன்னியாகுமரி- கேரள எல்லையில் வயிற்றுவலியால் உயிர்விட்ட கல்லூரி மாணவனின் உயிரிழப்பு சம்பவத்தில் திடீர் திருப்பமாக அவரது காதலி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவத்தில் காதலியே ஜுஸில் விஷம் கலந்துகொடுத்ததாக அவர் காவல் துறையினரிடம் ஒப்புக்கொண்டுள்ளது கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம் மாவட்டம் பாறசாலை பகுதியில் வசித்துவரும் ஜெயராமன் என்பவரின் மகன் ஷாரோன் ராஜ் (23). இவர் குமரி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி ரேடியோலஜி இறுதியாண்டு படித்து வந்தநிலையில், களியக்காவிளை அடுத்த ராமவர்மன்சிறை எனும் பகுதியில் எம்.ஏ படித்துவந்த கிரீஷ்மா (22) என்ற பெண்ணை அவர் காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் கிரீஷ்மாவின் பெற்றோருக்கு தெரியவந்த நிலையில் அவர்கள் இராணுவ வீரர் ஒருவருடன் அந்தப் பெண்ணிற்கு நிச்சயதார்த்தம் செய்து வைத்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து ஷாரோன் ராஜ் கடந்த 14 ஆம் தேதி தனது நண்பர் ரெஜின் என்பவருடன் கிரீஷ்மாவின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது கிரீஷ்மா, ரெஜினை வீட்டிற்கு வெளியே இருக்கச் சொல்லிவிட்டு ஷாரோனை மட்டும் வீட்டிற்குள் அழைத்துச் சென்று ஜுஸ் மற்றும் கஷாயம் கொடுத்துள்ளார். அதை அருந்திய ஷாரோன், நண்பருடன் புறப்பட்டு சென்ற வழியில் தனக்கு வயிறு வலிப்பதாகக் கூறியுள்ளார். இதையடுத்து அருகிலுள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில், வலி மேலும் அதிகரித்ததால் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 25 ஆம் தேதி அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தனது மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக ஷாரோனின் அப்பா ஜெயராமன் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீஸார், கிரீஷ்மாவிடம் விசாரணை நடத்திய நிலையில் வீட்டிற்கு வந்த ஷாரோனுக்கு தானே தன் கையால் விஷம் கொடுத்ததை அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இதனால் உடனடியாக கிரீஷ்மா கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் நெடுமாங்காடு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து நெடுமாங்காடு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்த கிரீஷ்மா திடீரென்று கழிவறையில் வைக்கப்பட்டு இருந்த கிருமிநாசினியைக் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தாகவும் இதனால் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் போலீஸார் தற்போது தகவல் தெரிவித்துள்ளனர்.
பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த வழக்கில் மேலும் சில திடுக்கிடும் தகவல்களும் கூறப்படுகின்றன. அதாவது கிரீஷ்மாவிற்கு நிச்சயதார்த்தம் ஆன நிலையில் இதற்கு முன்பு ஷாரோனுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அழித்துவிடுமாறு அவரிடம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்ட நிலையில், ஷாரோன் அதைப் பொருட்படுத்தாமல் இருந்ததாகவும் இதனால் திருமணத்திற்கு பிறகு தனது கணவரின் கவனத்திற்கு வீடியோ மற்றும் புகைப்படங்கள் சென்றுவிட்டால் என்ன செய்வது என்று பயந்த கிரீஷ்மாவே, தனது காதலனை வீட்டிற்கு அழைத்து வந்து ஜுஸில் விஷம் வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் திருமணத்திற்காக கிரீஷ்மாவின் ஜாதகத்தை ஜோதிடரிடம் காட்டியபோது அவர், இந்தப் பெண்ணின் முதல் கணவர் இறந்துவிடுவார் என்று பலன் கூறியதாகவும் இதற்காக ஒருவேளை ஷாரோனிற்கு விஷம் கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் விஷம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் கிரீஷ்மாவின் பெற்றோருக்கும் ஒருவேளை தொடர்பு இருக்கலாம் என்கிற கோணத்திலும் சந்தேகம் எழுந்துள்ளது.
தனது திருமணத்திற்காகக் காதலியே தனது காதலனுக்கு ஜுஸில் விஷம் கொடுத்த இந்த விவகாரம் தற்போது கேரள மற்றும் கன்னியாக்குமரி எல்லையில் கடும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments