இளைஞர்களின் ஆண்டாக மாறும் 2020: உள்ளாட்சி தேர்தலில் கல்லூரி மாணவி வெற்றி
- IndiaGlitz, [Thursday,January 02 2020]
மாணவர்கள் அரசியலைப் பற்றி தெரிந்து கொள்வது மட்டுமன்றி அரசியலில் ஈடுபட வேண்டும் என்றும் கமல்ஹாசன் உள்பட ஒரு சில சமூக அக்கறை உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் கூறிவரும் நிலையில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கல்லூரி மாணவி ஒருவர் வெற்றி பெற்றது இந்த ஆண்டில் சிறப்பான தொடக்கமாக கருதப்படுகிறது.
சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வரும் நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் கே என் தொட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 21 வயது கல்லூரி மாணவி ஜெய்சந்தியா ராணி என்பவர் போட்டியிட்டார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்களைவிட 210 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக சற்று முன்னர் அறிவிக்கப்பட்டார். இதனை அடுத்து இவர் நான்கு கிராம மக்களின் பஞ்சாயத்து தலைவராக தேர்வு பெற்றுள்ளார்.
இந்த நிலையில் தனக்கு கிடைத்த வெற்றி குறித்து கல்லூரி மாணவி ஜெய்சந்தியா ராணி கூறியபோது ’எனக்கு வாக்களித்த 4 கிராம மக்களுக்கும் நன்றி. நான் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தை விட எனது தொகுதியை முன்மாதிரியான தொகுதியாக வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே எனது நோக்கமாக இருந்தது. அதை நோக்கியே எனது பயணம் இருக்கும். எனது தொகுதியை கல்வியில் சிறந்த தொகுதியாக மாற்றுவேன் என்று அவர் கூறியுள்ளார்.
இளைஞர்கள் அரசியலுக்கு வருவது மட்டுமின்றி அவர்களிடம் பதவியும் கொடுத்தால் எதிர்கால இந்தியா மிகச் சிறப்பான முறையில் வளர்ச்சி அடையும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.