கல்லூரி இறுதியாண்டு தேர்வுகள்: உச்சநீதிமன்றத்தில் UGC தெரிவித்த இறுதிமுடிவு!!!
- IndiaGlitz, [Monday,August 10 2020]
கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளின் தேர்வுகள் நடத்தப் படவில்லை. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் பள்ளிகளின் தேர்வுகளை ரத்து செய்து அவர்களின் முந்தைய தேர்வுகளை அடிப்படையாகக் கொண்டு தேர்வு முடிவுகள் அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும் கல்லூரிகளின் முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு செமஸ்டர் தேர்வுகளையும் தமிழகம் உட்பட பல மாநிலங்கள் ரத்து செய்து அறிவித்து இருக்கின்றன. ஆனால் இறுதியாண்டு மாணவர்களின் நிலைமை தற்போது கேள்விக்குறியாகி இருக்கிறது. இதனால் முதலாம் மற்றும் இராண்டாமாண்டு மாணவர்களைப் போலவே இறுதியாண்டு தேர்வுகளையும் ரத்து செய்யுமாறு பல்வேறு மாநிலங்களில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகின்றன.
இதில் மாகராஷ்டிரா போன்ற சில மாநிலங்கள் கல்லூரிகளின் இறுதியாண்டு தேர்வுகளையும் ரத்து செய்து அறிவித்து இருக்கின்றன. ஆனால் கல்லூரிகளின் இறுதியாண்டு தேர்வுகளை குறித்து முடிவு செய்வதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் கிடையாது என பல்கலைக் கழக மாநிலக்குழு (UGC) உச்சநீதிமன்றத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறது. மேலும் கல்லூரிகளின் இறுதியாண்டு தேர்வுகளை கட்டாயம் நடத்தியாக வேண்டும். சில பல்கலைக் கழகங்களில் தேர்வுகளை நடத்த மாநில அரசுகள் முன்வந்திருக்கின்றன. எனவே அனைத்து மாநிலங்களிலும் தேர்வுகளை நடத்த நடவடிக்கை எடுக்கடப்பட வேண்டும் என UGC வலியுறுத்தியிருக்கிறது.
கல்லூரிகளின் இறுதியாண்டு தேர்வு நடத்தப்படுவது குறித்த வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைக்கு நடைபெற்ற வழக்கு விசாரணையில்தான் இதுபோன்ற வாக்குவாதங்கள் நடைபெற்று இருக்கின்றன. வழக்கில் UGC சார்பாக வாதாடிய சொலிசிஷ்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “பட்டம் வழங்குவதற்கான விதிகளை பல்கலைக் கழக மானியக் குழுவால் மட்டுமே பரிந்துரைக்க முடியும். மாநில அரசுகள் விதிகளை மாற்ற முடியாது. தேர்வுகள் எழுதாதது மாணவர்கள் நலத்திற்கு நல்லதாக அமையாது. இறுதித்தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். எழுதாத மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படாது. மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் விதிகளை மீறியுள்ளன” என வாதாடியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் அடுத்தக்கட்ட விசாரணைக்காக வழக்கு ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது.