திருப்பூர் சுப்பிரமணியன் தியேட்டருக்கு நோட்டீஸ் அனுப்பிய கலெக்டர்.. என்ன காரணம்?
- IndiaGlitz, [Tuesday,November 14 2023]
திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் அவர்களுக்கு சொந்தமான தியேட்டருக்கு மாவட்ட கலெக்டர் நோட்டீஸ் அனுப்பியதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தீபாவளியை முன்னிட்டு கார்த்தி நடித்த ’ஜப்பான்’ கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ’ஜிகர்தண்டா 2’ சல்மான் கான் நடித்த ‘டைகர் 3’ உள்பட சில படங்கள் ரிலீஸ் ஆகின. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி அளித்தது. ஆனால் அதே நேரத்தில் காலை 9.00 மணிக்கு முதல் காட்சி தொடங்க வேண்டும் என்றும் இரவு 1:30 மணிக்கு காட்சிகள் முடிய வேண்டும் என்றும் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் அறிவிப்பை மீறி காலை 7:00 மணிக்கு சிறப்பு காட்சிகள் திரையிட்டதாக திருப்பூர் சுப்பிரமணியன் அவர்களுக்கு சொந்தமான தியேட்டர் மீது புகார் இருந்தது. இந்த புகாரின் அடிப்படையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் விசாரணை நடத்தியதில் அனுமதியின்றி ஆறு காட்சிகள் திரையிடப்பட்டது தெரிய வந்தது.
இதனை அடுத்து இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு திரையரங்க உரிமையாளருக்கு கலெக்டர் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.