பைக்கை திருடி சொந்த ஊருக்கு சென்றவுடன் பைக்கை கொரியரில் அனுப்பிய நபர்
- IndiaGlitz, [Monday,June 01 2020]
கோவையில் உள்ள ஒரு நபர் பைக்கை திருடி, தனது குடும்பத்துடன் தனது சொந்த ஊருக்கு சென்ற பின், பைக்கை அதன் உரிமையாளருக்கு கொரியரில் அனுப்பி உள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கோவையை சேர்ந்த சுரேஷ் குமார் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன் தனது பைக் திருடப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் மன்னார்குடியை சேர்ந்த பிரசாந்த் என்பவர் கோவையில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவர் தனது குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தார். ஆனால் பேருந்து ரயில் என எந்தவித போக்குவரத்தும் இல்லாததால் எப்படி சொந்த ஊருக்கு செல்வது என்ற யோசனையில் ஆழ்ந்துள்ளார்
அப்போது அவர் அந்த பகுதியில் உள்ள சுரேஷ்குமாரின் பைக்கை திருடி மனைவி குழந்தையுடன் சொந்த ஊரான மன்னார்குடி சென்றுவிட்டார். அதன் பின்னர் அவர் மன்னார்குடியிலிருந்து பைக் உரிமையாளருக்கு, பைக்கை கொரியர் மூலம் அனுப்பி உள்ளார். பேக்கிங் மற்றும் அனுப்பும் சார்ஜ் முழுவதையும் அவரே கட்டிவிட்டார்
இந்த நிலையில் பைக் காணாமல் சோகமாக இருந்த சுரேஷ்குமாருக்கு கொரியர் அலுவலகத்தில் இருந்து போன் வந்தது. அதில் உங்கள் பைக் டெலிவரிக்கு தயாராக இருப்பதாகவும் வந்து உடனே எடுத்துக்கொள்ளவும் என்றும் கொரியர் அலுவலர் கூறியுளார். இதனையடுத்து அவர் கொரியர் அலுவலகம் சென்று பார்த்தபோது தனது பைக் நல்ல கண்டிஷனில் இருந்தது என்றும் அதில் இருந்த டாக்குமெண்ட்கள் உள்பட அனைத்தும் பத்திரமாக இருப்பதையும் அறிந்தார். இதனையடுத்து பைக்கை திருடிய நபர் தனது சொந்த ஊரில் இருந்து அதனை அனுப்பி உள்ளது அவருக்கு தெரிய வந்தது. இந்த சம்பவம் கோவை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது