'டிக்டாக்' வீடியோவால் சந்தேகம்: கல்லூரி பேராசிரியையை குத்தி கொலை செய்த கணவர்!
- IndiaGlitz, [Tuesday,June 04 2019]
டிக்டாக் வீடியோவால் கல்லூரி பேராசிரியை ஒருவரை அவரது கணவரே குத்தி கொலை செய்த திடுக்கிடும் சம்பவம் கோவை அருகே நடந்துள்ளது.
கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வரும் நந்தினி என்ற பெண், கனகராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் போனில் அடிக்கடி பலரிடம் பேசிக்கொண்டும், அடிக்கடி டிக்டாக் செயலியில் வீடியோக்களை நந்தினி பதிவு செய்ததால் கனகராஜ் கடும்கோபம் கொண்டார். இதுகுறித்து இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வருவதுண்டு. இந்த நிலையில் கருத்துவேறுபாடு காரணமாக கடந்த சிலநாட்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.
இந்த நிலையில் அவ்வபோது குழந்தைகளை பார்க்க நந்தினி வீட்டிற்கு செல்லும் கனகராஜ், டிக்டாக் செயலியில் வீடியோக்களை பதிவு செய்வதை நிறுத்துமாறு கூறியுள்ளார். ஆனால் கணவரின் அறிவுரையை நந்தினி காதில் வாங்கி கொள்ளவில்லை
இந்த நிலையில் சமீபத்தில் நந்தினியை போனில் தொடர்பு கொள்ள கனகராஜ் முயற்சித்துள்ளார். ஆனால் தொடர்ந்து அரை மணி நேரமாக அவரது போன் பிசியாக இருந்ததால் ஆத்திரம் அடைந்த கனகராஜ், மது அருந்திவிட்டு, நந்தினி பணிபுரியும் கல்லூரிக்கு சென்று அவரை சரமாரியாக குத்தி கொலை செய்தார். இதுகுறித்த தகவல் அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கனகராஜை கைது செய்து அவர் மீது கொலை வழக்கை பதிவு செய்துள்ளனர்.
டிக்டாக் வீடியோ செயலிக்கு இளம்பெண்கள் மட்டுமின்றி பல குடும்ப பெண்களும் அடிமையாகியுள்ளதால் இதுபோன்ற விபரீத சம்பவங்கள் நடப்பதாகவும், இந்த செயலியை மீண்டும் தடை செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.