பொருளாதார சரிவை சரிசெய்ய ரூ.9 ஆயிரம் கோடி சிறப்பு மானியம்-பிரதமரிடம் தமிழக முதல்வர் வைத்த கோரிக்கை!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் நரேந்திர மோடி, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில முதலமைச்சர்களுடன் நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இதில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா காலத்தில் தமிழகத்திற்கு ஏற்பட்ட பொருளாதார சரிவை சரிசெய்ய ரூ.9 ஆயிரம் கோடி சிறப்பு மானியம் அளிக்குமாறு கோரிக்கை வைத்தார். அதைத்தவிர கொரோனா நிவாரணமாக தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கியுள்ள ரூ.714.64 கோடி அவசரகாலம் மற்றும் நிவாரணத் தயார்நிலை தொகுப்புத் தொகையில் இருந்து இதுவரை தமிழகம் ரூ.512.64 கோடியை பெற்றுள்ளது எனத் தெரிவித்தார். இந்தத் தொகையை ரூ.3 ஆயிரம் கோடியாக உயர்த்தி வழங்குமாறும் முதல்வர் கேட்டுக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பேசிய முதல்வர், “பட்ஜெட் மதிப்பீட்டு அளவின்படி, மத்திய, மாநில வரி வருவாய் இருக்காது. அதில் பற்றாக்குறை ஏற்படும். அதை சரி செய்வதற்காகவும், கொரோனாவை எதிர்கொள்ளவும் அதற்குப் பின்வரும் பொருளாதார தாக்கங்களைச் சரிசெய்யவும் ரூ.9 ஆயிரம் கோடியை சிறப்பு மானியமாக அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதைத்தவிர இந்த ஆண்டு ஏப்ரல், மே, ஜுன் மாதங்களுக்கான ஜி.எஸ்.டி நஷ்ட ஈட்டை சீக்கிரமாகத் தர வேண்டும். மாநில பேரிடர் நிவாரண நிதி ஏற்கனவே தீர்ந்துவிட்டதால், தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும்.
நெல் கொள்முதலை ஊக்குவிக்கும் வகையில் நிலுவையில் உள்ள நெல் அரவைத் தொகை ரூ.1,321 கோடியை உடனடியாக வழங்க வேண்டும். எரிசக்திப் பிரிவில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நிவாரணத் தொகுப்பு நிதியை அறிவிக்க வேண்டும். மேலும், எரிசக்திப் பிரிவின் சீர்த்திருத்தத்துக்கான திட்டத்தை மாநிலங்கள் அமல்படுத்த அனுமதிக்க வேண்டும். கொரோனா நேரத்தில் பல நிதியுதவித் திட்டங்களை மாநில அரசு முன்மொழிந்துள்ளது. இதற்கான பொருளாதார விவகாரங்கள் துறையின் ஒப்புதலை விரைவாகப் பெற்றுத்தர வேண்டும்.
தமிழகத்தில் குறு, சிறு நடுத்தர தொழில்கள் மேம்பட ஆயிரம் கோடி ரூபாய் வழங்க இந்திய சிறு தொழிற்சாலைகள் மேம்பாட்டு வங்கியை வலியுறுத்த வேண்டும். சுயஉதவிக் குழுக்களுக்கு குறைந்தது ரூ.2 லட்சம் வரை அனைத்து வங்கிகளும் வழங்கும் சிறப்பு கடன் திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். மத்திய அரசின் உத்தரவாதத்துடன் கூடிய சிறு தொழில் கடன் உத்தரவாத நிதி (சி.ஜி.எப்.எம்.யு) சுய உதவிக் குழுக்களுக்கு வழங்குவதோடு அதை பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்புகளுக்கு விரிவுபடுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
மேலும் நாட்டிலேயே அதிக கொரோனா பரிசோதனைகளை செய்து வரும் மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது. நாளொன்றுக்கு 65 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்படுவதால் தினமும் ரூ.5 கோடி செலவாகிறது. இதில் 50 சதவீத செலவை பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதியில் (பி.எம்.கேர்ஸ்) இருந்து அளிக்க வேண்டும். இந்தியாவில் தமிழகத்தில்தான் கொரோனா தொற்றினால் ஏற்படும் சாவு குறைவாக அதாவது 1.6% ஆக உள்ளது. குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையிலும் 80.8% என்ற அளவில் தமிழகம் முன்னிலையில் உள்ளது” என்று தெரிவித்து இருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com