சென்னை மெட்ரோவில் பயணித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை சென்ட்ரல் எதிரே பயணிகளுக்கு வசதியாக பல்வேறு கட்டுமான பணிகள் மெட்ரோ ரயில் நிலையம் சார்பாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். இதையடுத்து மெட்ரோ ரயிலில் அவர் பயணித்து மேலும் சில மெட்ரோ ரயில் நிலையப் பணிகளை ஆய்வு செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

போக்குவரத்துக்கு மிக நெருக்கடியாக இருக்கும் சென்னை சென்ட்ரல் பகுதியில் சென்ட்ரல் பிளாசா (மத்தியச் சதுக்கம்) எனும் பெயரில் மிகப்பெரிய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆசியாவிலேயே முதல் முறையாக இந்தப் பகுதியில் பல்வேறு வழித்தடங்களில் செல்ல வேண்டிய பாதசாரிகளை இணைக்கும் வண்ணம் மிகப்பெரிய கட்டுமானப் பணி 400 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை முதல்வர் நேரில் பார்வையிட்டார்.

31 தளங்களைக் கொண்டு அமையவுள்ள இந்த சென்ட்ரல் பிளாசாவில் 300 நான்கு சக்கர வாகனங்கள், 1,500 இருசக்கர வாகனங்கள் நிற்பதற்கு ஏற்ப வாகன நிறுத்துமிடம் மற்றும் வணிக வளாகம், தொழில் நிறுவனங்களின் அலுவலகம் போன்றவை அமைவதற்கு ஏற்ப கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை விரைந்து முடிக்குமாறு முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் ஏஜிடிம்எஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து ஆலந்தூர் வரை மெட்ரோ ரயிலில் பயணித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து கத்திப்பாராவில் நடக்கும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.