நடிகர் கார்த்தி சந்திப்பு எதிரொலி: உடனடியாக செயல்பட்ட முதல்வர் ஸ்டாலின்!
- IndiaGlitz, [Tuesday,July 06 2021]
மத்திய அரசு சமீபத்தில் ஒளிப்பதிவு வரைவு திருத்த மசோதாவை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்ததை அடுத்து தமிழ் திரை உலகில் உள்ள பிரபலங்கள் பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் நேற்று நடிகர் கார்த்தி, நடிகை ரோகினி, தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி உள்ளிட்டோர் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்து, மத்திய அரசின் ஒளிப்பதிவு வரைவு மசோதாவுக்கு எதிராக திரையுலகினர் நடத்தும் போராட்டங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறும், மத்திய அரசிடம் இந்த சட்டத் திருத்தத்தை கைவிடுமாறு தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து மனு ஒன்றை அளித்தனர்
இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் உறுதி அளித்துள்ளதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி கூறினார். இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சற்று முன்னர் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்
இந்த கடிதத்தில் மத்திய அரசின் புதிய ஒளிப்பதிவு வரைவு திருத்த மசோதா கருத்து சுதந்திரத்தை பாதிக்கக் கூடிய அளவில் இருப்பதாகவும், மாநில அரசுகளின் அதிகாரத்தை குறைக்க கூடிய வகையில் இருப்பதாலும் இந்த சட்டத் திருத்த மசோதாவை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்
நடிகர் கார்த்தி உள்பட திரையுலகினர் நேற்று கோரிக்கை விடுத்த நிலையில் இன்று உடனடியாக முதல்வர் செயல்பட்டு மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது