ஜெய்பீம் படம் பார்த்ததும் நான் சிறையில் பட்ட துன்பங்கள் ஞாபகம் வந்தது: முதல்வர் ஸ்டாலின்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் பாராட்டுக்கு வார்த்தைகள் இன்இ நெகிழ்ந்து நிற்கிறேன் எனது சூர்யா அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். சூர்யா நடித்த ஜெய்பீம் படத்தை நேற்று பார்த்த தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அந்த படத்தை பாராட்டி நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
நேற்றையதினம் 'ஜெய்பீம்' படத்தைப் பார்த்தேன். அதன் நினைவுகள் இரவு முழுவதும் மனதைக் கனமாக்கிவிட்டன. விளிம்புநிலை இருளர் மக்களின் வாழ்வியலையும், அவர்கள் அனுபவித்து வரும் துன்ப துயரங்களையும் இதனைவிடத் துல்லியமாக, கலைப்பூர்வமாகக் காட்சிப்படுத்த இயலாது என்பதைக் காட்டிவிட்டீர்கள்.
நடந்த ஒரு நிகழ்ச்சியை மையமாக வைத்து புனையப்பட்ட திரைக்கதையாக இருந்தாலும் அது பார்வையாளர் மனதில் ஏற்படுத்திய தாக்கம் என்பது மிகமிகக் கனமானதாக இருக்கிறது. சில நேரங்களில் சில காவல் துறை அதிகாரிகள் செய்யும் தவறுகள், அந்தத் துறைக்கே மாபெரும் களங்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. அதேநேரத்தில், உண்மையை வெளிக்கொண்டு வர இன்னொரு காவல் துறை அதிகாரியே துணையாக இருக்கிறார் என்பதையும் காட்டி இருக்கிறீர்கள். நேர்மையும்,மனசாட்சியும் கொண்ட அதிகாரிகளால் உண்மை நிலைநாட்டப்படும் என்பதையும் காட்டி உள்ளீர்கள்.
சட்டமும் நீதியும் கொண்டு எத்தகைய அவலத்தையும் துடைத்தெறிய முடியும் என்பதையும் எடுத்துச் சொல்கிறது இந்தப் படம். ஒரு வழக்கறிஞர் (சந்துரு, ஒரு காவல் துறை அதிகாரி (ஐஜி பெருமாள்சாமி) ஆகிய இருதரப்பும் நினைத்தால் சமூக ஒழுங்கீனங்களைத் தடுத்து நிறுத்த முடியும்.
அமைதியான, அதேநேரத்தில், அழுத்தமான வழக்கறிஞராக நண்பர் சூர்யா அவர்கள் திறம்பட நடித்துள்ளார். நடித்துள்ளார் என்பதைவிட, வழக்கறிஞர் சந்துருவாகவே வாழ்ந்துள்ளார். இக்கதையைத் தேர்வு செய்ததும், அதனைப் படமாக எடுத்ததும், அதில் தானே நடித்ததுமென மூன்று பாராட்டுகளை சூர்யா பெறுகிறார்.
கதைக்களத்தை கலைக்களமாக மாற்றிச் சிறப்பாக இயக்கியுள்ள இயக்குநர் திரு. த.செ. ஞானவேல் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற படங்கள் ஏராளமாக வரவேண்டும் என்பதே எனது ஆசையும் விருப்பமும் ஆகும்.
இருளர் குறித்த படம் எடுத்ததோடு தனது கடமை முடிந்துவிட்டது எனக் கருதாமல், பழங்குடியினர் பாதுகாப்புச் சங்கத்தின் மேம்பாட்டுக்கு ஒரு கோடி ரூபாய் நிதியினை நண்பர் சூர்யா அவர்கள் வழங்கியது என்னை நெகிழச் செய்தது. இருளர் வாழ்வில் ஒளியேற்றும் முயற்சியாகும் இது. இதுபோன்ற செயற்கரிய செயல்களை அனைவரும் செய்ய வேண்டும்.
'ஜெய்பீம்' படம் பார்க்க நான் சென்றபோது சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதியரசர் திரு. சந்துரு அவர்களைச் சந்தித்தேன். நீதியரசர் என்று யாரையும் சொல்லக் கூடாது என்று சொல்பவர் அவர். ஆனாலும் எங்களுக்கு அவர் நீதியரசர்தான்.] அவர் என்னிடம் நீதியரசர் இஸ்மாயில் ஆணையத்தின் அறிக்கையைக் கொடுத்தார்கள். மிசா சட்டத்தின்படி நாங்கள் கைது செய்யப்பட்டது குறித்த விசாரணை ஆணையத்தின் அறிக்கை அது. காவல் நிலையம் ஒன்றில் நடந்த இதேபோன்ற தாக்குதல்தான் சென்னை மத்திய சிறையில் 1976 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் நாள் இரவு எனக்கும் நடந்தது. என் மீது விழுந்த பல அடிகளைத் தாங்கியவர் மரியாதைக்குரிய சிட்டிபாபு அவர்கள். அதனால் அவரது உயிரே பறிபோனது. அன்று நடந்த சித்திரவதைகளை 'சிறை டைரி'யாக சிட்டிபாபு அவர்கள் எழுதி உள்ளார்கள். இந்த நினைவுகள் அனைத்தும் நேற்று 'ஜெய்பீம்' பார்த்துவிட்டு வெளியில் வந்தபோது என் மனக்கண் முன் நிழலாடியது.
இப்படி பல்வேறு தாக்கங்களை என்னுள் ஏற்படுத்தக் காரணமான 'ஜெய்பீம்' படக் குழுவினருக்கு எனது பாராட்டுகள்! நண்பர் சூர்யாவுக்கு எனது வாழ்த்தும் நன்றியும் !
முதல்வரின் இந்த அறிக்கைக்கு நெகிழ்ந்து சூர்யா பதிவு செய்த டுவிட்டில் கூறியிருப்பதாவது: வார்த்தைகளின்றி நெகிழ்ந்து நிற்கிறேன். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் உணர்வுப்பூர்வமான பாராட்டு, ஜெய்பீம் திரைப்படத்தின் நோக்கத்தை நிறைவேற்றி இருக்கிறது. ஜெய்பீம் படக்குழுவினர் அனைவரின் சார்பாகவும் நமது தமிழக முதல்வருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout