நடிகர் ஸ்ரீகாந்த் எங்கள் வீட்டின் பக்கத்து வீட்டுக்காரர்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் ’தங்கப்பதக்கம்’ சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ’பைரவி’ உள்பட 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் நேற்று காலமானதை அடுத்து திரை உலகம் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் நடிகர் ஸ்ரீகாந்தின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் முக ஸ்டாலின்: பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன் இயக்குனர் ஸ்ரீதர் அவர்களால் திரையுலகில் அறிமுகமாகி பைரவி தங்கப்பதக்கம் உள்ளிட்ட மறக்க முடியாத பல திரைப்படங்களில் ஸ்ரீகாந்த் அவர்கள் நடித்துள்ளார். கதாநாயகனாக மட்டுமின்றி அனைத்து வகையான பாத்திரங்களிலும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தும் கலைஞராக அவர் திகழ்ந்துள்ளார். எங்கள் இல்லத்தின் அருகே வசித்தவர் என்பதால் தனிப்பட்ட முறையிலும் அவரை நான் நன்கு அறிவேன். பலமுறை அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பினையும் பெற்றுள்ளேன். திரு ஸ்ரீகாந்த் அவர்களை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தமிழ் திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: என்னுடைய அருமை நண்பர் திரு ஸ்ரீகாந்த் அவர்கள் மறைவு எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்.

உலக நாயகன் கமல்ஹாசன்: கதாநாயகன், வில்லன், குணச்சித்திரப் பாத்திரங்கள் என ஆல்ரவுண்ட் நடிப்புக் கலைஞராகத் திகழ்ந்த ஸ்ரீகாந்த், தீவிரமான இலக்கிய வாசகராகவும் ஜெயகாந்தனின் ஆப்த சிநேகிதராகவும் இருந்தார். இன்று தன் இயக்கங்களை நிறுத்திக்கொண்டார். இதய கனத்தோடு வழியனுப்பிவைப்போம்.