சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லானுக்கு மணிமண்டபம் – முதல்வர் பழனிசாமியின் அதிரடி முடிவு!
- IndiaGlitz, [Tuesday,February 16 2021]
நேற்று நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அருந்ததியர் மாநாடு நடைபெற்றது. ஆதிதமிழர் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். மேலும் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, கருப்பண்ணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய தமிழக முதல்வர், சுதந்திர போராட்ட வரலாற்றில் கொங்கு மண்டலத்திற்கு தனி பெருமை உள்ளது. அதிலும் தீரன் சின்னமலையின் படை தளபதியாக இருந்த அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த பொல்லனுக்கு தனி சிறப்பு உண்டு. அவரது திருவுருவ சிலையை வைத்து மணிமண்டபம் அமைக்கப்படும் என்றும் அவரது பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் தமிழக முதல்வர் பேசினார். இந்த அறிவிப்பிற்கு பலரும் வரவேற்பை அளித்து இருந்தனர்.
மேலும் பேசிய தமிழக முதல்வர் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 82 ஆயிரம் கோடி கடன் உதவித்தொகை வழங்கப்பட்டு உள்ளது. இதைக் கொண்டு பட்டியல் இன மக்கள் பல தொழில்களை செய்து பயன்பெற்று வருகின்றனர். அதோடு சொந்த வீடு இல்லாத அருந்ததியர் மற்றும் ஆதிதிராவிடர்களுக்கு அரசு சார்பில் இலவசப் பட்டா நிலங்கள் வழங்கப்படும் என்றும் இதில் வீடு இல்லாத 50 ஆயிரம் நபர்களுக்கு இலவசமாக கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்புக்கு பலரும் வரவேற்பை தெரிவித்து வருகின்றனர்.