வீடு தேடிவரும் மருந்து, மாத்திரைகள்… புது திட்டத்தை அமல்படுத்தும் தமிழக முதல்வர்!
- IndiaGlitz, [Wednesday,July 28 2021]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் “மக்களைத் தேடிவரும் மருத்துவம்” எனும் பெயரில் புது திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறார். வரும் 5 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் இந்தத் திட்டத்தின்படி தமிழகம் முழுவதும் ஒருகோடி பேருக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று தேவைப்படும் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட இருக்கிறது.
நீண்ட நாள் நோயாளிகள், இணை நோய் கொண்டவர்கள், வயது முதிர்ந்தவர்கள் எனப் பலரும் கொரோனா நேரத்தில் மருந்து, மாத்திரைகளை வாங்குவதற்கு கடும் அவதியுற்று வருகின்றனர். இந்நிலையில் 1 கோடி நோயாளிகளுக்கு அவர்களின் வீடுகளுக்கே தேடிச்சென்று மருந்து வழங்கும் புது திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்த இருக்கிறார்.
தமிழகத்தில் 20 லட்சம் நீரிழிவு நோயாளிகள் உள்ளனர். இதைத்தவிர சிறுநீர புற்றுநோய், காச நோய், சிறுநீரக சிகிச்சை, முடக்குவாதம், உயர் ரத்த அழுத்த நோய் எனப் பல நோய்களுக்கு மக்கள் தொடர்ந்து மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்கின்றனர். இதுபோன்ற நோயாளிகளுக்கு இனி தமிழக அரசு அவர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று மருந்து, மாத்திரைகளை வழங்க இருக்கிறது.
இந்நிலையில் “மக்களைத் தேடிவரும் மருத்துவம்” எனும் இத்திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி கிருஷ்ணகிரியில் இருந்து துவக்கி வைக்கிறார். முதற்கட்டமாக 20 லட்சம் நோயாளிகளுக்கு இத்திட்டத்தின் மூலம் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட இருக்கிறது. இதைத்தொடர்ந்து ஒரு கோடி பேருக்கு இந்தத் திட்டம் செயல்படுத்த இருப்பதாகவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதைத்தவிர, தனியார் மருத்துவமனைகளில் இலவசக் கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், தமிழகம் முழுவதிலும் உள்ள 137 மருத்துவமனை நிர்வாகத்திடம் ஆலோசனை நடத்தி இருக்கிறார். இதனால் சேவை அடிப்படையில் இனி தனியார் மருத்துவமனைகளிலும் இலவசக் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் கொண்டு வரப்பட இருக்கிறது.
அதன் முதற்கட்டமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் 36 ஆயிரம் பேருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட இருக்கிறது. இதைத் தொடர்ந்து மாவட்டம் தோறும் இந்தப் பணி படிப்படியாக துவக்கி வைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.