டாஸ்மாக்-கை இதற்காகத் தான் திறக்கிறோம்....! ஸ்டாலின் கூறிய பதில்....!
- IndiaGlitz, [Saturday,June 12 2021]
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை இதற்காகத் தான் திறக்கிறோம் என்று முதல்வர் முக.ஸ்டாலின் விளக்கம் கூறியுள்ளார்.
வரும் ஜூன்-14-ஆம் தேதிக்கு பின்பு மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஊரடங்கில் ஒரு சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் பாதிப்பு அதிகமுள்ள குறிப்பிட்ட 11 மாவட்டங்களை தவிர, பிற மாவட்டங்களுத்தான் இந்த தளர்வுகள் உள்ளடங்கும். அந்தவகையில் சலூன் கடைகள், அழகு நிலையங்கள், வீட்டு உபயோக மின் பொருட்களின் விற்பனை மற்றும் பழுதுநீக்கும் கடைகள், அரசு பூங்காக்கள் உள்ளிட்டவை, குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுடன் இயங்கும். இதனுடன் மதுபானக் கடைகள் இயங்கவும் அனுமதி தரப்பட்டுள்ளது.
மதுபானக் கடைகள் செயல்பட அரசு அனுமதித்த நிலையில், இச்செய்தி தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு காரணம் அதிமுக ஆட்சியின்போது டாஸ்மாக் திறக்கக்கூடாது என தனது வீட்டு வாசலில் கருப்பு உடை அணிந்து போராட்டம் நடத்தினார் ஸ்டாலின். ஆனால் அவரே முதல்வரான பின், கொரோனா காலத்தில் இக்கடைகளை திறக்க அனுமதிப்பதா...? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. பல விமர்சனங்களுக்கு இடையில், பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஸ்டாலின் அவர்கள் கூறியிருப்பதாவது, மேற்கு மண்டலங்களில் டாஸ்மாக்-கை திறக்க அனுமதிக்கவில்லை. கொரோனா தொற்று குறைந்த குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே கடையை திறக்க அனுமதித்துள்ளோம் என்று கூறியுள்ளார்.
டீ கடைகள் திறக்க அனுமதிக்காத அரசு, டாஸ்மாக்-க்கு அனுமதியளித்துள்ளதால், இதற்கான அவசியம் தற்போது தேவையா என நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.