டீக்கடையில் அமர்ந்து சிறுவனிடம் உரையாடிய முதல்வர்… வைரலாகும் புகைப்படம்!
- IndiaGlitz, [Saturday,January 08 2022]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றுகாலை சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் சைக்கிளிங் பயிற்சி மேற்கொண்டுள்ளார். இதற்கு நடுவே ஒரு டீக்கடையில் அமர்ந்து தேநீர் அருந்திய அவர் அங்கிருந்த ஒரு சிறுவனிடம் ஆன்லைன் வகுப்பு குறித்து கேட்டிறிந்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்சிப்பணி, அரசுப் பணி என பல்வேறு நெருக்கடிக்கு மத்தியில் தொடர்ந்து வொர்க்அவுட், உடற்பயிற்சி மற்றும் சைக்கிளிங் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில் நேற்று தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிவடைந்த நிலையில் இன்று காலை சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் அவர் சைக்கிளிங் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
அப்போது கோவளம் அருகே டீக்கடை ஒன்றில் அமர்ந்து தேநீர் அருந்திய முதல்வர் அங்கிருந்த சிறுவனிடம் எந்த பள்ளியில் படிக்கிறாய்? எந்த வகுப்பு? ஆன்லைன் வகுப்பில் பள்ளிப்பாடங்கள் புரிகிறதா? எனக் கேட்டுள்ளார். இதற்குப் பதிலளித்த அந்தச் சிறுவன் கோவளத்தில் இருக்கும் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படிக்கிறேன். ஆன்லைன் வகுப்புகள் தனக்கு புரிகிறது எனப் பதிலளித்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் கவனம் பெற்று வருகின்றன.