சுயலாபத்திற்காகவே மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார்… திருச்சி பிரச்சாரத்தில் முதல்வர் காட்டம்!
- IndiaGlitz, [Wednesday,March 31 2021]
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன. இத்தேர்தலில் மூத்த அரசியல் தலைவர்கள் யாரும் இல்லாத நிலையில் திமுக, அதிமுக எனும் இருமுனை போட்டி வலுவாக இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் சூறாவளி வாக்குச் சேகரிப்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில் திருச்சியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அதிமுகவின் ஊழலை விசாரிக்க தனிநீதிமன்றம் வேண்டும் எனப் பொய்யாக குற்றம் சாட்டி வருகிறார். ஆனால் திமுகவைச் சேர்ந்த 13 முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தற்போது அனைத்து வழக்குகளும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த வழக்குகள் அனைத்தும் ஊழலுக்காகவே நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படி இருக்கையில் திமுக தலைவர் அதிமுக மீது குற்றம் சாட்டுவதில் என்ன நியாயம் இருக்கிறது. அதேபோல தனது வாரிசை அரசியலில் கொண்டு வருவதற்காகவே சில வேலைகளும் அவர் தொடர்ந்து தீவிரமாகச் செய்து வருகிறார். ஆக, மு.க.ஸ்டாலின் செய்யும் அனைத்துச் செயல்திட்டங்களும் தனது வாரிசை மனதில் வைத்துக் கொண்டே செய்து வருகிறார்.
மேலும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்று நாடாளுமன்றத்திற்குச் சென்ற எத்தனை திமுக எம்.பிக்கள் தமிழகத்திற்கான திட்டங்களை கொண்டு வந்தார்கள்? நாடாளுமன்றத்திற்கு சென்ற அவர்கள் முதலில் தமிழகத்தை நினைத்துப் பார்த்தார்களா? அதோடு திமுகவில் இடம்பெற்று இருக்கும் அனைத்து எம்.பிகளும் பணம் படைத்தவர்களாகவே இருந்து வருகின்றனர். இவர்கள் எப்படி மக்களுக்கான நலத்திட்டங்களைக் குறித்து சிந்தனை செய்வார்கள்? இப்படி தேர்தல் பிரச்சாரத்தின போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திமுகவின் மீது அடுக்கடுக்கான பல்வேறு குற்றச்சாட்டுகளை எடுத்துக் கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.