திமுகவில் பிரச்சாரம் செய்ய ஆளில்லையா? பிரச்சாரக் கூட்டத்தில் தமிழக முதல்வர் விமர்சனம்!
- IndiaGlitz, [Friday,March 26 2021]
“வெற்றி நடைபோடும் தமிழகம்” எனும் பெயரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் தமிழக முதல்வர் தொடர்ந்து எதிர்க்கட்சியினரின் செய்கைகளுக்கும் கேள்விகளுக்கும் பதிலடி கொடுத்து வருகிறார். அந்த வகையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் செய்துவரும் சில செயல்களை எடுத்துக் காட்டிப் பேசிய அவர் திமுகவில் மூத்தத் தலைவர்கள் யாருமே இல்லையா? என விமர்சித்து உள்ளார்.
மதுரை பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அவர், “துரைமுருகன், நேரு, ஐ.பெரியசாமி போன்ற மூத்தத் தலைவர்கள் பலரும் திமுகவில் செயல்பட்டு வருகின்றனர். அவர்களின் பேரன் வயதுள்ள உதயநிதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இவரை மூத்த தலைவர்கள் பலரும் ஓடிச்சென்று வரவேற்கின்றனர். கார் கதவைக் கூட திறந்து விடுகின்றனர். ஆனால் அதிமுகவில் இப்படியொரு நிலைமை இல்லவே இல்லை. இது ஜனநாயகக் கட்சி. சாதாரணத் தொண்டன் கூட எம்எல்ஏ அமைச்சராக ஏன் முதல்வராக கூட முடியும்“ எனக் காட்டமாக பதில் அளித்து உள்ளார்.
வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக முழுவதும் கடும் பரபரப்பு சூழல் இருந்து வருகிறது. இந்நிலையில் தேர்தல் முடிவு குறித்து சர்வே எடுப்பதும், அந்த முடிவுகளை வைத்து விவாதங்கள் நடப்பதும் என தமிழக அரசியல் களம் தற்போது சூடுபிடித்து உள்ளது. இந்நிலையில் திமுக கட்சியில் இருக்கும் தலைவர்களை ஏன் ஒரு பொருட்டாக அக்கட்சி மதிப்பது இல்லை எனும் தொணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தின் போது விமர்சித்து உள்ளளார்.