மு.க.ஸ்டாலினுடன் நேரடியாக விவாதிக்க நான் தயார்- அதிரடி காட்டும் தமிழக முதல்வர்!
- IndiaGlitz, [Friday,March 12 2021]
சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே தமிழகத்தில் அதிமுக, திமுக எனும் இருபெரும் கட்சிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட ஆரம்பித்து விட்டன. இதற்காக அதிமுக “வெற்றிநடை போடும் தமிழகம்” எனும் பெயரில் தனது பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தது. அதே நேரத்தில் திமுக “விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்” எனும் பெயரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபடத் தொடங்கினார். எதிரணியில் உள்ள திமுக மாவட்டம் தோறும் மக்களை நேரடியாக சந்திக்கும் முயற்சியிலும் ஈடுபட்டது. இப்படியான பிரச்சாரங்களுக்கு இடையில் தமிழக முதல்வர் எழுச்சி பெற்ற தமிழகம் என்ற பெயரில் அதிமுக கொண்டு வந்த அனைத்து நலத்திட்டங்களை பற்றியும் மக்களிடம் எடுத்துக் கூறினார். அதோடு புதிய நலத்திட்டங்களையும் தொடர்ந்து ஒவ்வொரு கூட்டங்களிலும் அறிவிக்கத் தொடங்கினார்.
இந்நிலையில் திமுக, ஆளும் கட்சி மீது தொடர்ந்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைக் கூறத் தொடங்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த ஜனவரி முதலே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் ஒரு துண்டு சீட்டு இல்லாமலே நேரடியாக விவாதத்தில் கலந்து கொள்ள நான் தயார் என கூறி இருந்தார். தற்போது தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அதற்கான தொகுதி பங்கீடுகள் இறுதி செய்யப்படும் நிலையில் இந்தியா டுடே நாளிதழ் சென்னையில் India Today conclave south 2021 எனும் பெயரில் நிகழ்ச்சி தொடங்கி உள்ளது.
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மீண்டும் திமுக கூறும் அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் நேரடியாக பதில் கூற நான் தயாராக இருக்கிறேன். அதுவும் ஒரு துண்டு சீட்டு கூட இல்லாமல் விவாதத்தில் கலந்து கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.