செங்கலை காட்டிய எதிர்க்கட்சிக்கு பதிலடி கொடுத்த தமிழக முதல்வர்!
- IndiaGlitz, [Friday,March 26 2021]
தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவரப்படும் என கடந்த 2015 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பட்ஜெட்டில் அன்றைய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்து இருந்தார். அதையொட்டி கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பிரதமர் மோடி கரங்களால் மதுரை, தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டிடம் எதுவும் எழுப்பப்படாமலே இருக்கிறது எனப் பல்வேறு தரப்புகளில் இருந்தும் விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது.
அதுவும் தேர்தல் நேரத்தில் இந்த விவகாரம் கடும் விவாதத்தை எழுப்பி இருக்கிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் மிகப்பெரிய எய்ம்ஸ் மருத்துவமனையை அதிமுக அரசு கொண்டு வந்துள்ளது. ஆனால் இதுகுறித்து எதிர்க்கட்சிகள் குறைச் சொல்லியே வருகின்றன எனப் பதிலடி கொடுத்தார்.
மதுரை திருமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாருக்கு வாக்கு செக்கானூரணி பகுதியில் திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார். அப்போது “மு.க.ஸ்டாலின் செல்லும் இடங்களில் எல்லாம் பொய்யான பிரச்சாரம் செய்து வருகிறார். தமிழகத்தில் மிகப்பெரிய எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வந்துள்ளது அதிமுக அரசு.
மேலும் திருமங்கலம் நகரில் போக்குவரத்து நெரிசலை தடுக்க புதிய பேருந்து நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் பேருந்து நிலையம் அமைக்கப்படும். எவ்வளவோ செய்துள்ள அதிமுகவின் திட்டங்கள் அனைத்தும் மு.க.ஸ்டாலின் கண்களுக்கு தெரிவதில்லை. அதிமுக அரசு ஊழல் செய்வதாக தவறான அறிக்கையை வெளியிட்டு வருகிறார்”. என விளக்கம் அளித்துள்ளார்.