நிவாரணத் தொகையை உயர்த்தி விவசாயிகளை குஷிப்படுத்திய தமிழக முதல்வர்… குவியும் பாராட்டு!!!
- IndiaGlitz, [Monday,January 04 2021]
தமிழகத்தில் நிவர், புரெவி போன்ற புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளுக்கு உதவும் வகையில் தமிழக முதல்வர் இடுபொருள் நிவாரணத் தொகையை ரூ.600 கோடியாக உயர்த்தி உள்ளார். இதனால் தமிழகத்தில் 5 லட்சம் விவசாயிகள் பயன்பெற முடியும் என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்து உள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில், “நிவர் மற்றும் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட 5 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாரணம் வழங்கப்படும். விவசாயிகள் வங்கி கணக்கில் ஜனவரி 7 ஆம் தேதி முதல் நேரடியாக நிவாரணம் வரைவு வைக்கப்படும். புயலால் பாதிக்கப்பட்ட 3.10 லட்சம் நிலங்களுக்காக ரூ.5,264.38 கோடி தேவை என மத்திய அரசிடம் கோரப்பட்டு உள்ளது. பேரிடரால் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இதனால் இடுபொருள் வழங்க உச்ச வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது. 2 ஏக்கர் என்ற உச்ச வரம்பை தளர்த்தி பாதிக்கப்பட்ட பரப்பளவு முழுமைக்கு நிவாரணம் தர ஆணையிடப்பட்டு உள்ளது.
மேலும் “மானாவாரி மற்றும் பாசன வசதி பெற்ற பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500 க்கு பதில் ரூ.20,000 வழங்கப்படும். பல்லாண்டு கால பயிர்களுக்கு நிவாரணத் தொகை ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.25,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். அனைத்து மானாவாரி பயிர்களுக்கும் இடுபொருள் நிவாரணத் தொகை ஹெக்டேருக்கு ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். மானாவாரி நெல் தவிர பிற பயிர்களுக்கு நிவாரணம் ஹெக்டேருக்கு ரூ.7,410 இல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தி தரப்படும்” என்று கூறப்பட்டு உள்ளது.