தமிழக விவசாயிகளுக்கு ரூ.1,116 கோடி இடுபொருள் நிவாரணம்… முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
- IndiaGlitz, [Monday,February 01 2021]
கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட நிவர் புயலின் தாக்கத்தினால் தமிழக விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப் பட்டனர். இதற்கான நிவாரணத் தொகையை தமிழக அரசு அறிவித்ததோடு பாதிப்புகளுக்கு ஏற்ப தமிழக விவசாயிகளுக்கு அத்தொகை வழங்கப்பட்டது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களில் இருந்த பயிர்களுக்கு வழங்கப்படும் இடுபொருள் நிவாரணத் தொகையை தமிழக முதல்வர் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். இந்த அறிவிப்பால் சுமார் 11.43 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் புயல் பாதிப்பினால் ஏற்பட்ட இடுபொருள் நிவாரணத் தொகையாக ரூ.1,116 கோடி வழங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். இதனால் சுமார் 11.43 லட்சம் விவசாயிகளுக்கு மத்திய அரசின் நிதியுதவியை எதிர்நோக்கி நிவாரணம் தரப்படும். மேலும் 6.81 லட்சம் எக்டேர் பரப்பிலான வேளாண், தோட்டக்கலை பயிர்களுக்கு நிவாரணம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. புயல் நிவாரணமாக ஏற்கனவே ரூ.543.10 கோடி விவசாயிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது.
மேலும் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை மத்தியக் குழு பிப்ரவரி 3,4,5 ஆம் தேதியில் பார்வையிட இருக்கிறது எனத் தெரிவித்து உள்ளார். தமிழக முதல்வர் விவசாயத்திற்கு மட்டுமல்லாது, இணைய வழி வகுப்புகளில் கலந்து கொள்ள மாணவர்களுக்கு தினமும் 2ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்கி வருகிறார். இதனால் 9,69,047 மாணவர்கள் தினமும் 2ஜிபி டேட்டா கார்டுகளைப் பெற்று, வரும் ஏப்ரல் மாதம் வரை பயன்பெற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.