ஆன்லைன் வகுப்பின்போது செல்போன் வெடித்து உயிரிழந்த சிறுவன்… அதிர்ச்சி சம்பவம்!
- IndiaGlitz, [Thursday,October 21 2021]
ஆன்லைன் வகுப்பின்போது செல்போன் வெடித்து சிதறியதால் 5 ஆம் வகுப்பு பயிலும் மாணவன், பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் வியட்நாம் நாட்டில் அரங்கேறி இருக்கிறது.
கொரோனா பாதிப்பின் காரணமாக வர்த்தகம் முதற்கொண்டு கல்வி, வேலை என அனைத்தும் தற்போது டிஜிட்டல் யுகத்திற்கு மாறியிருக்கிறது. இந்நிலையில் வியட்நாம் நாட்டிலுள்ள என்ஹே ஆன் எனும் மாகாணத்தைச் சேர்ந்த 5 ஆம் வகுப்பு மாணவன் ஒருவர் கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி எப்போதும்போல ஆன்லைன் வகுப்பில் பாடங்களை கவனித்து வந்துள்ளார்.
இந்நிலையில் திடீரென சிறுவன் பயன்படுத்திய செல்போன் வெடித்து சிதறியதால் மாணவனுக்கு கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி அந்த மாணவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது.
இதுகுறித்து தகவல் அளித்த அந்நாட்டு போலீசார் சிறுவன் ஆன்லைன் வகுப்பின்போது மொபைலை சார்ஜ் செய்தவாறு, காதுகளில் ஹெட் போனை போட்டுக் கொண்டு வகுப்பை கவனித்ததாகவும் இதனால் பேட்டரி அதிக வெப்பமடைந்து திடீரென வெடித்ததாகவும் தகவல் தெரிவித்து உள்ளனர். இந்தச் சம்பவத்தைப் பார்த்த பெற்றோர் பலரும் தற்போது கடும் பீதியை வெளிப்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.