சேம் சைடு கோல் போட்ட நிர்மலா பெரியசாமி. வளர்மதி, சி.ஆர்.சரஸ்வதி காட்டம்
- IndiaGlitz, [Tuesday,March 21 2017]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக இரண்டாக உடைந்தாலும், சசிகலா அணியில் உள்ள பலர் இன்னும் ஓபிஎஸ் அவர்களின் மறைமுக ஆதரவாளர்களாக இருக்கின்றார்கள் என்றும் சரியான சமய சந்தர்ப்பத்தில் அவர்கள் அணிமாறுவார்கள் என்றும் கூறப்பட்டு வந்தது. இந்த கருத்து உண்மை என்பதை சமீபத்தில் நடந்த நட்சத்திர பேச்சாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் வெளிப்படையாக தெரியவந்தது.
இந்த கூட்டத்தில் பேசிய கட்சியின் செய்தித்தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி, 'ஆர்.கே.நகர் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு மக்கள் ஆதரவு இருப்பதால் அதிக ஓட்டுகளை பெறுவார்கள் என்று பேசினார். சசிகலா அணியின் கூட்டத்தில் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவாக பேசி சேம் சைடு கோல் போட்ட நிர்மலாவுக்கு வளர்மதி மற்றும் சி.ஆர்.சரஸ்வதி கடும் கண்டனம் தெரிவித்ததோடு, பன்னீர்செல்வத்தை பற்றி இங்கு பேசக்கூடாது என்று கூறினர்.
ஆனால் நிர்மலா பெரியசாமி தொடர்ந்து 'மக்கள் செல்வாக்கு உள்ளவரை பற்றி பேசுவதில் தவறில்லை என்று பதிலடி கொடுத்தார். மேலும் ஜெயலலிதா வளர்த்த கட்சி மற்றும் இரட்டை இலை சின்னத்திற்காகத்தான் இந்த அணியில் இருப்பதாக கூறினார். இதனால் நிர்மலாவை வளர்மதி, சி.ஆர்.சரஸ்வதி மற்றும் குண்டு கல்யாணம் ஆகியோர் கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் கூட்டத்தை விட்டு வெளியேறிய நிர்மலா, பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: கட்சி ஒற்றுமைக்காக நான் ஒரு கருத்தை சொன்னேன். பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணியினர் நமக்கு என்ன விரோதிகள் இல்லை. அவர்களும் நம் கட்சியை சேர்ந்தவர்கள் தான் என்று கூறினேன். கட்சி சின்னம் பறிபோய் விடக்கூடாது என்ற ஆதங்கத்தில்தான் நான் கூறிய இந்த கருத்துக்கு அந்த கூட்டத்தில் இருந்த வளர்மதியும், சி.ஆர்.சரஸ்வதியும், குண்டு கல்யாணமும் என்னை மோசமாக திட்டினர். அவர்கள் அளவுக்கு இறங்கி பேச நான் விரும்பாததால் கூட்டத்தை விட்டு வெளியேறினேன். இரட்டை இலை சின்னம் எங்கு இருக்குமோ அங்குதான் நான் இருப்பேன். இதுகுறித்து கட்சி தலைமை விளக்கம் கேட்டால் அதற்கும் தயாராக இருக்கின்றேன்' என்று கூறினார்.
நட்சத்திர பேச்சாளர்கள் கூட்டத்தில் நடந்த இந்த சலசலப்பு அதிமுகவினர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.