தரை லோக்கலாக இறங்கிய காயத்ரி. தராதரத்துடன் ஒதுங்கிய ஓவியா

  • IndiaGlitz, [Friday,July 21 2017]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் ஒருவாரம் மட்டுமே டீசண்டாக இருந்த காயத்ரி அதன்பின்னர் அவருடைய சுயரூபம் வெளிப்படும் வகையில் நடந்து கொண்டு அனைவரின் வெறுப்பிற்கும் ஆளாகி வருகிறார்.

முதலில் ஆர்த்தியுடன் இணைந்து புறம் பேசிய காயத்ரி, ஆர்த்தி வெளியேறியவுடன் தனியாகவும், நமீதாவுடன் இணைந்தும் பிக்பாஸ் குடும்பத்தின் ஒற்றுமையை குலைக்கும் வேலையில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் ஜூலியை ஆத்திரத்துடன் நேரில் திட்டியும், ஓவியாவை அவர் இல்லாத போதும் திட்டிய காயத்ரி, இன்றைய புரமோ வீடியோவில் ஓவியாவிடம் நேரடியாக சண்டை போட்டுள்ளதாக காண்பிக்கப்படுகிறது. 'என்னால் உங்கள் பெயர் கெட்டு போய்விட வேண்டாம், உங்களுக்கு நல்ல பெயர் உள்ளது' என்று ஓவியா டீசண்டாக சொல்ல, அதற்கு காயத்ரி படுகேவலமான ஒரு ரியாக்சனை வெளிப்படுத்தியதோடு, 'மூஞ்சியும் மொகரக்கட்டையும்' என்ற வார்த்தையையும் பயன்படுத்துகிறார். இதனால் மேலும் சண்டையை பெரிதாக்க வேண்டாம் என்ற எண்ணத்துடன் தராதரம் கருதி ஓவியா எழுந்து செல்வது போல் இன்றைய வீடியோ முடிந்துள்ளது.

எனவே இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு விறுவிறுப்பான சண்டையை நேயர்கள் எதிர்பார்க்கலாம்.