சிவில் சர்வீஸ் தேர்வு… உதவித்தொகையுடன் இலவசமாக பயிற்சி பெறுவதற்கு அரிய வாய்ப்பு!

  • IndiaGlitz, [Thursday,June 15 2023]

தமிழக அரசால் நிர்வகிக்கப்படும் பயிற்சி மையத்தில் இணைந்து உதவித்தொகையுடன் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு பயிற்சி பெறுவது தொடர்பாக தலைமைச் செயலர் இறையன்பு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சிவில் சர்வீஸ் தேர்வு எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப்பணித் தேர்விற்கு தயார் செய்துவரும் மாணவர்களுக்கு உதவித்தொகை, தங்கும் வசதி, உணவு மற்றும் இலவசமாக பயிற்சி அளிக்கும் வகையில் தமிழக அரசு சென்னையில் அகில இந்தியக் குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையத்தை நிர்வகித்து வருகிறது.

இந்த மையத்தில் தற்போது சிவில் சர்வீஸ் தேர்வில் Preliminary Exams (முதல்நிலைத் தேர்வு) பிரிவில் தகுதிப்பெற்ற மாணவர்களுக்கு Mains Examination (முதன்மைத்தேர்வு) தேர்வுக்காக பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. கடந்த மே 28 ஆம் தேதி முதல்நிலைத் தேர்வு முடிந்து அதற்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன. இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தற்போது முதன்மைத் தேர்வுக்கு தயாராகி வரும் நிலையில் அவர்களுக்கு இலவசமாக தங்கும் வசதி மற்றும் உதவித்தொகையுடன் பயிற்சி வழங்கப்பட இருக்கிறது.

இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள விரும்பும் மாணவர்கள் ஜுன் 15 காலை 10 மணி முதல் ஜுன் 17 மாலை வரை www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதில் தேர்வாகும் மாணவர்களுக்கு ஜுன் முதல் செப்டம்பர் வரை 3 மாதங்களுக்கு பயிற்சி வழங்கப்படும். கூடவே மாதம்தோறும் ரூ. 3 ஆயிரம் உதவித்தொகை, தங்கும் வசதி, உணவு, இலவசப் பயிற்சி ஆகியவை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.

மேலும் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி விண்ணப்பித்து இருக்கும் மாணவர்களில் இருந்து 225 பேர் மட்டும் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட இருப்பதாகவும் இடஒதுக்கீட்டு முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் கூறப்பட்டு இருக்கிறது. இப்பயிற்சிக்கு தேர்வாகும் மாணவர்களின் விவரம் வரும் ஜுன் 18 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.

கடந்த மே 28 ஆம் தேதி நடைபெற்ற குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வில் இந்த மையத்தில் சார்பாக 31 மாணவர்கள் தேர்வாகி உள்ளனர். அதில் 7 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பாக ஒவ்வொரு வருடமும் குடிமைப்பணித் தேர்வினை அறிவித்து வருகிறது. இதில் இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, இந்திய வனத்துறை பணி, இந்திய வெளியுறவுப் பணி, இந்திய பாதுகாப்புப் பணி உள்ளிட்ட மத்திய பணிகளுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

அந்தத் தேர்வானது முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு நேர்காணல் என்று 3 நிலைகளைக் கொண்டுள்ளது. எனவே இதற்கு தயார் செய்யும் மாணவர்களுக்கு உதவும் வகையில் சென்னையில் உள்ள அகில இந்தியக் குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையம் இலவச வகுப்பினைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.

அதேபோல, அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையம், கோயம்புத்தூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் கட்டணமில்லா பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற மையங்களில் இணைந்து மாணவர்கள் தரமான நூலம், கட்டணமில்லாமல் தங்கும் வசதி, உணவு, காற்றோட்டமுள்ள வகுப்பறைகள் என அனைத்தையும் பெற முடியும்.