சிவில் சர்வீஸ் தேர்வு முடிவு: மாற்றுத்திறனாளி உட்பட கெத்துக்காட்டும் தமிழக மாணவர்கள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 2019, செப்டம்பர் மாதம் நடைபெற்ற இந்திய சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று வெளியிடப் பட்டுள்ளது. அத்தேர்வில் தமிழகத்தைச் சார்ந்த மாற்றுத்திறனாளி உட்பட பலரும் வெற்றிப் பெற்று சாதனை படைத்துள்ளனர். மதுரை மணிநகரைச் சேர்ந்த ஆவுடைதேவி-கே. முருகேசன் தம்பதியினரின் மூத்த மகள் பூர்ணசுந்தரி. இவர் பார்வை சவால் கொண்ட மாற்றுத்திறனாளி. இவர் தற்போது சிவில் சர்வீஸ் தேர்வில் கலந்து கொண்டு இந்திய அளவில் 286 ஆவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவரைத் தவிர கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பெண்கள் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிப் பெற்றுள்ளனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம், மருங்கூர் கிராமத்தைச் சார்ந்த முந்திரி விவசாயி ராமநாதன் மகள் ஐஸ்வர்யா இந்திய அளவில் 47 ஆவது இடத்தைப் பிடித்து இருக்கிறார். தமிழகத்தில் இவர் இரண்டாவது இடத்தில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஐஸ்வர்யா கடலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் கட்டுமானப் பிரிவில் பொறியியல் படிப்பை முடித்தவர். பின்பு ஓராண்டு சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பயிற்சியைப் பெற்று கடந்த 2017 இல் நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்விலும் கலந்து கொண்டிருக்கிறார்.
2017 இல் நடைபெற்ற தேர்வில் இந்திய அளவில் 630 ஆவது இடத்தைப் பிடித்து தற்போது தெலுங்கானா மாநிலத்தின் செகந்திரா மாவட்டத்தில் கலெக்டர் பயிற்சியைப் பெற்று வருகிறார். மறுபடியும் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் கலந்து கொண்டு இந்திய அளவில் 42 ஆவது இடத்தைப் பிடித்து தமிழகத்தில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தன்னுடைய கனவைப் பற்றி சொல்லும் ஐஸ்வர்யா கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது கடலூர் மாவட்ட கலெக்டராக இருந்தவர் ககன்தீப் சிங். இவர் நெருக்கடியான நேரத்தில் செயல்பட்டதைப் பார்த்துதான் எனக்கு கலெக்டர் ஆக வேண்டும் என்ற ஆசையே வந்தது என்று தெரிவித்து இருக்கிறார்.
அடுத்ததாக கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பண்டரக்கோட்டை பகுதியைச் சார்ந்த சிவப்பிரகாசம் மகள் பிரியங்கா இந்திய அளவில் 68 ஆவது இடத்தைப் பிடித்து சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிப் பெற்றுள்ளார். இவர் தமிழகத்தில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரியங்காவின் தந்தை சுகாதாரத்துறை ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். அம்மா போஸ்ட் மாஸ்டர். இவர்களை முன்மாதிரியாக எடுத்துக்கொண்ட பிரியங்கா கடலூர் மாவட்டத்தில் தனியார் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்துக் கொண்டு சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பயோ மருத்துவப் பிரிவில் பொறியியல் படிப்பை நிறைவு செய்திருக்கிறார். பின்பு சிவில் சர்வீஸ் தேர்வுக்கான பயிற்சியைப் பெற்று கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் கலந்து கொண்டிருக்கிறார். அந்த தேர்வில் இவர் தோல்வியடைந்து இருக்கிறார். தற்போது இந்திய அளவில் 68 ஆவது இடத்தைப் பிடித்து தமிழகத்தில் 3 ஆவதாக இருக்கிறார்.
அடுத்து கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத். இவரின் மகள் கிருஷ்ணப்பிரியா. இந்திய அளவில் 514 ஆவது இடத்தைப் பிடித்து இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிப் பெற்றுள்ளார். இந்தி வரிசையில் கன்னியாக்குமரி மாவட்டத்தைச் சேர்ந்த கணேஷ்குமார் என்ற இளைஞர் தேசிய அளவில் 7 ஆவது இடத்தைப் பிடித்து தமிழகத்திற்கு பெருமை தேடி தந்துள்ளார். இவர்தான் தமிழகத்தை பொறுத்த அளவில் முதல் இடத்தைப் பிடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களைப் போல பல தமிழக மாணவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிப்பெற்று முன்னணியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout