பாரதிராஜாவின் வலதுகரமாக இருந்த ஒளிப்பதிவாளர் மறைவு: திரையுலக பிரமுகர்கள் இரங்கல்
- IndiaGlitz, [Saturday,June 13 2020]
தமிழ் சினிமாவின் பழம்பெரும் ஒளிப்பதிவாளரும் பாரதிராஜா இயக்கிய பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவருமான ஒளிப்பதிவாளர் பி.கண்ணன் காலமானார். அவருக்கு வயது 69. அவருடைய மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஒளிப்பதிவாளர் கண்ணன் அவர்கள் பழம்பெரும் திரைப்பட இயக்குநர் பீம்சிங்கின் மகனும், பிரபல திரைப்படத் தொகுப்பாளர் லெனினின் சகோதரரும் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா உடன் இணைந்து பல்வேறு திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். குறிப்பாக காதல் ஓவியம், அலைகள் ஓய்வதில்லை, கிழக்குச் சீமையிலே, டிக் டிக் ,மண் வாசனை, முதல் மரியாதை போன்ற படங்கள் சூப்பர்ஹிட் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஒளிப்பதிவாளர் கண்ணன் வடபழனி தனியார் மருத்துவமனையில் இதய நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கண்ணனின் மறைவுக்கு பாரதிராஜா உள்பட பல திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.