இணையதளம் மூலம் மட்டுமே சினிமா டிக்கெட்: அமைச்சர் அறிவிப்பு
- IndiaGlitz, [Monday,September 02 2019]
தற்போது திரையரங்கு டிக்கெட்டுக்கள் கவுண்ட்டர்கள் மற்றும் இணையதளம் ஆகிய இரண்டிலும் விற்பனையாகி வரும் நிலையில் விரைவில் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் இணையதளம் மூலம் மட்டுமே திரைப்படங்களுக்கான டிக்கெட்டுக்கள் விற்பனை செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மேலும் திரையரங்க டிக்கெட் முன்பதிவுகளை முறைப்படுத்தும் வகையில் செயலி உருவாக்குவதற்கான முன்மொழிவு உள்ளதாகக் கூறிய அமைச்சர், 'இனிமேல் அரசு நிர்ணயிக்கும் கட்டணமே வசூலிக்கப்படும் என்றும், இணையதளம் மூலம் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறை படிப்படியாக அமல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போது ஒருசில தனியார் நிறுவனங்கள் மட்டுமே இணையதளம் மூலம் முன்பதிவு செய்து வருகின்றன. இதனால் டிக்கெட் ஒன்றுக்கு சேவைக்கட்டணமாக ரூ.30 வரை வசூல் செய்யப்படுவதால் திரைப்பட ரசிகர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அரசின் செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறை அமலுக்கு சேவைக்கட்டணம் இல்லாமலோ அல்லது குறைந்த அளவு சேவைக்கட்டணமோ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.