அரசு அறிவிக்கும் வரை அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு!
- IndiaGlitz, [Saturday,May 15 2021]
ஊரடங்கில் அரசு தளர்வுகள் அறிவிக்கும் வரை அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து என தயாரிப்பாளர் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்த மே 10ஆம் தேதி முதல் தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதும், இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சினிமா படப்பிடிப்புகள் அரசின் தளர்வுகள் அறிவிக்கப்படும் வரை ரத்து செய்யப்படும் என தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் ஆர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
புதிதாக பதவியேற்றுள்ள முதலமைச்சர் மற்றும் செய்தி விளம்பரத்துறை அமைச்சரை சந்தித்து, சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை மேற்கொள்ள அணுமதிக்குமாறு ஒட்டுமொத்த திரையுலகத்தினர் சார்பாக வேண்டுகோள் விடுத்தோம். அதை கனிவுடன் பரிசீலிப்பதாக அமைச்சர் அவர்கள் தெரிவித்திருந்தார்.
ஆனால் கொரோனா என்கிற பெருந்தொற்று கடுமையாக பாதித்துள்ள சூழலில், தமிழக முதல்வர் அறிவித்துள்ள ஊரடங்கை தமிழ் திரையுலகமும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, முதலமைச்சர் அறிவித்துள்ள ஊரடங்கில் எந்த வித படபிடிப்பையும், திரை சம்மந்தமான எந்த வித பணியையும் செய்வதில்லை. கொரோனா தொற்று குறைந்த பிறகு தமிழக அரசு தளர்வுகள் அறிவித்தவுடன் அதற்கேற்ப படப்பிடிப்பு நடத்த ஏற்பாடு செய்யப்படும். அதுவரை எந்தவொரு படப்பிடிப்பும் நடைபெறாது என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்
இவ்வாறு தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் ஆர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார்